சிறுமி பலாத்கார வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சிறுமி பலாத்கார வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-25 19:36 GMT
ஜெயங்கொண்டம்:

போக்சோவில் கைது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த வி.கைகாட்டி அருகே உள்ள நாகமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் பீமன் மகன் ரஞ்சித்(வயது 21), ரவி மகன் விஜய்(28), உத்திராபதி மகன் ரமேஷ்(23), ராஜேந்திரன் மகன் சத்யராஜ்(24). இவர்கள் ஒருவர் பின் ஒருவராக 15 வயது சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து கடந்த மாதம் திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.
குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
இதையடுத்து அவர்கள் 4 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். அதன்படி 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல், சிறையில் உள்ள 4 பேரிடமும் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்