ஐகோர்ட்டில் உதவியாளர் பணி: 3,500 பணியிடங்களுக்கு 40 ஆயிரம் பேர் குவிந்தனர்

சென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள 3,500 உதவியாளர் பணியிடங்களுக்கு 40 ஆயிரம் பேர் தேர்வு எழுத குவிந்தனர். என்ஜினீயரிங், ஆராய்ச்சி படிப்பு படித்தவர்களும் இந்த தேர்வில் பங்கேற்றனர்.

Update: 2021-09-27 00:13 GMT
உதவியாளர் பணியிடம்
சென்னை ஐகோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளையில் சுமார் 3 ஆயிரத்து 500 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐகோர்ட்டு நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த வேலைக்காக ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அந்த விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியானவர்கள் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். 26-ந் தேதி (நேற்று) எழுத்துத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

40 ஆயிரம் பேர் எழுதினர்
சென்னை பச்சையப்பாகல்லூரி, அடையாறு சட்ட பல்கலைக்கழகம் ஆகிய 2 இடங்களில் நேற்று, நேற்று முன்தினம் என 2 நாட்கள் இந்த தேர்வு நடந்தது. தேர்வு எழுதுவதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் 24-ந் தேதி இரவே சென்னை வந்தனர். 2 மையங்களிலும் சேர்த்து சுமார் 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இந்த பணிக்கு அடிப்படை கல்வித்தகுதி பிளஸ்-2 வகுப்பு தான். ஆனால் பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, என்ஜினீயரிங் படித்தவர்கள், ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டவர்கள் என அதிகபட்ச கல்வித்தகுதியுடைய பலரும் இந்த தேர்வில் பங்கேற்றனர்.

கைக்குழந்தையுடன்வந்த பெண்கள்
தேர்வு எழுத வந்த பெண்களில் பலர் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர். கர்ப்பிணி பெண்களும் பலர் தேர்வு எழுத வந்திருந்தனர். குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காக தேர்வு எழுத வந்த பெண்களின் உறவினர்கள் உடன் வந்திருந்தனர். இதனால் தேர்வு மையங்கள் திருவிழா கூட்டம் போல் காட்சி அளித்தது. தேர்வு நடந்த கல்லூரி, பல்கலைக்கழகத்தின் மைதானத்தில் அவர்களை அமரவைத்து ஹால் டிக்கெட்டுகளை பரிசோதித்து ஒவ்வொருவராக தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தாயைத்தேடி அழுத குழந்தைகள்
கைக்குழந்தையுடன் வந்த பெண்கள், குழந்தைகளை உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு தேர்வு எழுத சென்ற சிறிது நேரத்தில் குழந்தைகள் தாயைத்தேடி அழத்தொடங்கின. அந்த குழந்தைகளை உறவினர்கள் தாலாட்டு பாடியும், வேடிக்கை காண்பித்தும் அழுகையை தற்காலிகமாக நிறுத்தினர். சில குழந்தைகளின் அழுகையை நிறுத்துவதற்கு உறவினர்கள் பெரும் பாடுபட்டனர். சிலர் தேர்வு நடந்த கல்லூரி, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மரங்களில் குழந்தைகளுக்கு தொட்டில் அமைத்து அவர்களை தூங்க வைத்து நிம்மதி அடைந்தனர்.

ஒழுங்குபடுத்திய போலீசார்
தேர்வு எழுத கூடிய கூட்டத்தை அறிந்த டீ, காபி, தண்ணீர் பாட்டில், பிஸ்கட், சுண்டல், வேர்க்கடலை போன்றவற்றை விற்பனை செய்யும் சிறு வியாபாரிகளும் அங்கு குவிந்தனர். இந்த பொருட்களின் விற்பனையும் அமோகமாக நடந்தது. தேர்வு எழுதுவதற்கு ஏராளமானோர் வந்ததால் அவர் களை ஒழுங்குபடுத்துவதற் காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இருந்தபோதிலும் ஒரே நேரத்தில் அனைவரும் முண்டியடித்ததால் ஹால் டிக்கெட்டை சரி பார்த்து அவர்களை தேர்வு அறைக்கு அனுப்புவதற்கு போலீசார் சிரமப்பட்டனர்.

மேலும் செய்திகள்