தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

ராமநாதபுரம் அருகே தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட்டு தீர்ப்பளித்தது

Update: 2021-09-29 18:10 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

2-வது மனைவி

ராமநாதபுரம் அருகே உள்ள புல்லங்குடி கிராமம் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 50). இவர் செங்கல்சூளை வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி இறந்துவிட்ட நிலையில் சூளையில் வேலை பார்த்த கனகா (45) என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.  இந்நிலையில் கனகா செங்கல் சூளைக்கு வருபவர்களிடம் நெருங்கி பழகி வந்தாராம். இதனை கண்ட சண்முகம், அவருடைய மகன் பிரவீன்குமார் (29) ஆகியோர் கனகாவை கண்டித்துள்ளனர். 

கழுத்தை இறுக்கி கொலை

 இதுதொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் செங்கல்சூளை அருகில் உள்ள கொட்டகையில் வைத்து தகராறு ஏற்பட்டதில் மனைவியை உருட்டுக்கட்டையால் சண்முகம் தாக்கினாராம். இதில் படுகாயமடைந்த கனகாவை சண்முகமும், அவருடைய மகன் பிரவீன்குமார் (29) மற்றும் வேன் டிரைவரான அதேபகுதியை சேர்ந்த முருகன் (28) ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். கீழே விழுந்துவிட்டதாக கூறி கட்டுப்போட்டு முதலுதவி சிகிச்சை பெற்ற நிலையில் நாட்டுவைத்திய முறைப்படி சிகிச்சை பெற்றுக்கொள்வதாக கூறி ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி விட்டனர்.
அங்கிருந்து செங்கல்சூளைக்கு திரும்பி வந்த நிலையில் கனகாவுடன் தகராறு ஏற்பட்டதால், ஆத்திரம் அடைந்த சண்முகம் செங்கல்சூளை கொட்டகையில் வைத்து கனகாவை அவரது தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

ஆயுள் தண்டனை 

இதுதொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து சண்முகம், அவருைடய மகன் பிரவீன்குமார், வேன் டிரைவர் முருகன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்ரா, மனைவியை கொலை செய்த சண்முகத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் அதனை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். 
இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த பிரவீன்குமார், வேன் டிரைவர் முருகன் ஆகியோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் அதனை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்