தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி;

Update:2021-10-01 00:00 IST

ஆபத்தான கட்டிடம்

கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குடியிருப்பு ஆம்புலன்ஸ் டிரைவர் கள் ஓய்வெடுக்கும் அறையாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் பாழடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழ வாய்ப்பு உள்ளதால், டிரைவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கட்டிடத்தை சரிசெய்வதுடன், அங்கு வீணாக கிடக்கும் கட்டில்களை அகற்ற வேண்டும்.

  ஜேசுதாஸ், கோத்தகிரி.

பிளாஸ்டிக் கழிவுகளால் ஆபத்து

  பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள், அங்கு சாலையோரத்தில் சுற்றித்திரியும் குரங்குகளுக்கு பிளாஸ்டிக் கவர்களுடன் உணவு வழங்குகிறார்கள். அவற்றை வாங்கும் குரங்குகள் அந்த பிளாஸ்டிக் கவர்களுடன் உணவை சாப்பிடுகிறது. இதனால் அவற்றுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதால், குரங்குகளுக்கு உணவு வழங்குவதை தடுக்க வேண்டும்.

  ராஜன், வேட்டைக்காரன்புதூர்.

பழுதான சாலை

  பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் நல்லூரில் இருந்து ஜமீன் ஊத்துக்குளி வரை சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.

  நல்லசாமி, ஜமீன் ஊத்துக்குளி.

இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்

  பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியில் இருந்து மோதிராபுரம் செல்லும் வழியில் சாலையின் இருபுறத்திலும் இறைச்சி கழிவுகள் மற்றும் கட்டிடக்கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டு உள்ளன. இதனால் அதிகளவில் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே அந்த கழிவுகளை அகற்றுவதுடன், அங்கு கழிவுகளை கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

  விமல்ராஜ், மோதிராபுரம்.

தடையை மீறும் சுற்றுலா பயணிகள்

  ஆழியாறு அணை அருகே ஆழியாற்றில் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் சுழல் மற்றும் சேறும் சகதியும் அதிகமாக இருக்கிறது. எனவே இங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தடையை மீறி தடுப்பணையில் இறங்கி ஆபத்தை அறியாமல் குளித்து வருகிறார்கள். எனவே அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  அன்பழகன், பொள்ளாச்சி.

தினத்தந்தி செய்தி எதிரொலி:

டிரான்ஸ்பார்மர் சரி செய்யப்பட்டது 

  கோவை ராமகிருஷ்ணா சிக்னலில் இருந்து ஆவாரம்பாளையம் செல்லும் வழியில் இருந்த டிரான்ஸ்பார்மர் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இதுகுறித்து கடந்த 27-ந் தேதி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து டிரான்ஸ்பார்மரை சரிசெய்து உள்ளனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.

  தாபன் கோஸ், கோவை.

தேங்கி நிற்கும் தண்ணீர்

  கோவை மாவட்டம் நம்பர்.2 கூடலூர் பேரூராட்சியில் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த சாலை 2 அடி உயரமாக உள்ளது. இதனால் மழை பெய்யும்போது சாலையை சுற்றி தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. எனவே அங்கு தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.

  ராமசாமி செல்வமணி, வெங்கடேஸ்வரா நகர்.

தெருநாய்கள் தொல்லை

  பெரியநாயக்கன்பாளையம் அண்ணாநகர் பகுதியில் தெருநாய்களின் தொல்லை மிக அதிகமாக இருக்கிறது. குழந்தைகள் மற்றும் வாகனங்களில் செல்வோர்களை துரத்துகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

  கந்தசாமி, பெரியநாயக்கன்பாளையம்.

குப்பைகளால் துர்நாற்றம்

  கோவை மசக்களிபாளையத்தில் உள்ள குப்பை தொட்டியை சுத்தம் செய்யாததால் அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் அந்த பகுதியில் சுற்றித திரியும் நாய்கள் கீழே விழுந்து கிடக்கும் குப்பைகளைக் கிளருகின்றன. எனவே அந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

  ரஞ்சித், மசக்காளிபாளையம்.

வேகத்தடை வேண்டும்

  கோவை 27-வது வார்டு சின்னவேடம்பட்டி சுப்ரமணியா நகர் குப்புசாமி லே-அவுட் பகுதியில் உள்ள சாலையில் வளைவுகள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த பகுதியில் அதிகளவில் விபத்துக்கள் நடக்கின்றன. எனவே வளைவுகள் உள்ள இடத்தில் வேகத்தடைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  வேணுகோபால், சின்னவேடம்பட்டி.

ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்

  கோவைப்புதூரை சுற்றி குளத்துபாளையம், அறிவொளி நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அருகில் உள்ள சுண்டக்காமுத்தூர் செல்ல வேண்டியுள்ளது. எனவே கோவை புதூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தால் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  சுரேஷ், கோவைப்புதூர்.

மேலும் செய்திகள்