தொடர் மழையால் தக்காளி விலை கிடு கிடு உயர்வு
தொடர் மழையால் தக்காளி விலை கிடு கிடு உயர்வு;
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் தொடர் மழையால் தக்காளி விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.29-க்கு விற்பனையானது.
தினசரி சந்தை
கோவை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் கிணத்துக்கடவில் தினசரி காய்கறி சந்தை உள்ளது. இங்கு கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் விவசாய நிலங்களில் விளையும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
சந்தையில் நடைபெறும் ஏலத்தில் கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு காய்கறிகளை ஏலம் எடுத்து செல்கின்றனர்.
ஆண்டுதோறும் வழக்கமாக புரட்டாசி மாதம் தக்காளி சீசன் தொடங்கும். அப்போது அதிகளவிலான தக்காளிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
தக்காளி விலை உயர்வு
அதன்படி, நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 12 டன் தக்காளிகள் விற்பனைக்கு வந்தது. கிணத்துக்கடவு பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்ததால், சந்தைக்கு வழக்கத்தைவிட தக்காளி வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது.
தக்காளிகளை கொள்முதல் செய்ய அதிகளவில் வியாபாரிகள் வந்ததால் நேற்று நடைபெற்ற ஏலத்தில் தக்காளி விலை எதிர்பாராத அளவில் கிடுகிடுவென கூடியது. அதன்படி ஒரு கிலோ தக்காளி ரூ.29 வரை ஏலம் போனது.
இது கடந்த வாரத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.17 அதிகமாக ஏலம் போனது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.12-க்கு மட்டுமே விற்பனையானது.
மற்ற காய்கறிகள் விலை (ஒரு கிலோ) விவரம் வருமாறு:-
பச்சை மிளகாய் -ரூ.30, வெண்டைக்காய் -ரூ.35, அவரைக்காய் -ரூ.35, சுரைக்காய் -ரூ.20, பீர்க்கங்காய் -ரூ.25, பாகற்காய் -ரூ.15, புடலங்காய் -ரூ.20, முருங்கைக்காய் -ரூ.55-க்கும் ஏலம் போனது.
மழையால் செடி அழுகல்
தக்காளி விலை அதிகரிப்பு குறித்து கமிஷன் கடை உரிமையாளர்கள் கூறியதாவது:-
கிணத்துக்கடவில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தொடங்கி தை மாதம் வரை தக்காளி சீசன் நீடிக்கும். கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஒரு நாளைக்கு 24 டன்னுக்கு மேல் தக்காளி விற்பனைக்காக வந்தது.
ஆனால் தற்போது கிணத்துக்கடவு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பெரும்பாலான பகுதிகளில் தக்காளி செடிகள் அழுகி சேதமடைந்துள்ளது. இதனால் தற்போது கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.
இதனால் யாரும் எதிர்பார்க்காத அளவில் தக்காளி விலை தினசரி காய்கறி சந்தையில் ஒரு கிலோ ரூ.29 வரைக்கும் அதிகரித்துள்ளது. அடுத்து தீபாவளி பண்டிகை வர உள்ளதால் தக்காளி தேவை அதிகம் இருக்கும் என்ற காரணத்தினால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.