கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் விரைவில் 70 சதவீத இலக்கு எட்டப்படும்

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் விரைவில் 70 சதவீத இலக்கு எட்டப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Update: 2021-10-03 17:57 GMT
திருப்புவனம்,
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் விரைவில் 70 சதவீத இலக்கு எட்டப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
4-ம் கட்ட முகாம்
பொது சுகாதாரத் துறையின் மூலம் கொரோனா நோய்த் தொற்று தடுப்பிற்கான மாபெரும் 4-ம் கட்ட தடுப்பூசி முகாம் திருப்புவனம் யூனியனில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலை வகித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். 
பின்னர் அவர் கூறியதாவது :-  முதல்- அமைச்சரின்  சீரிய திட்டத்தால் கொரோனா நோய்த்தொற்று தடுப்பிற்கான தடுப்பூசி தமிழகத்தில் 62 சதவீதம் செலுத்தப்பட்டு இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தமிழக அரசின் சிறப்பான பணிகளை கண்டறிந்த மத்திய அரசு கடந்த மாதம் ஒரு கோடியே 4 லட்சம் தடுப்பூசி மருந்துகள் இலக்கு நிர்ணயித்து வழங்கியது.
கடிதம்
 மருத்துவத்துறை சிறப்பாக திட்டமிட்டு செயல்பட்டதால் மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக 38 லட்சம் தடுப்பூசி மருந்துகள் பெற்று கடந்த மாதம் ஒரு கோடியே 42 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. நடப்பு மாதத்திற்கு 1 கோடியே 23 லட்சம் தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கீடு செய்துள்ளனர். தடுப்பூசி மருந்துகள் தேவைப் பட்டால் கூடுதலாக கேட்டு பெறப்படும். முதல்-அமைச்சர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வாரத்திற்கு ஒரு முறை 50 லட்சம் எனவும் மாதத்திற்கு 2 கோடி என தடுப்பூசி மருந்துகள் வழங்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார். அதை நாடாளுமன்ற உறுப்பினரும் வலியுறுத்தி வருகிறார்.
இலக்கு 
தமிழகத்தை பொறுத்தவரை 18 வயதிற்கு மேற்பட்ட வர்களுக்கு முதல் தவணையாக 62 சதவீத தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. உலக சுகாதார வல்லுநர்கள் அறிவுரையின்படி 70 சதவீத மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டாலே உயிர் சேதம் இன்றி பாதுகாத்துக் கொள்ள லாம் என அறிவுரை வழங்கி உள்ளார்கள். அந்த வகையில்  முதல்-அமைச்சரின் சீரிய முயற்சியால் தடுப்பூசி செலுத்து வதில் விரைவில் 70 சதவீத இலக்கு எட்டப்படும். கொரோனா நோய் தொற்றின் 3-ம் கட்ட அலை என்னும் அச்சம் தேவையில்லை. சிவகங்கை மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்கள் மூலமாகவும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 6,55,247 ஆகும். இது 61 சதவீதம் ஆகும். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 1,69,980 ஆகும். 
கர்ப்பிணிகள்
 அந்தவகையில் கர்ப்பிணிகளுக்கும், பிரசவமான தாய்மார் களுக்கும் தடுப்பூசி போட உத்தரவிட்ட மறுநாளே தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கும், பிரசவமான தாய்மார்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் செல்வநாயகம், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர். ராம்கணேஷ், மருத்துவத்துறை இணை இயக்குனர் டாக்டர். இளங்கோமகேசுவரன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சண்முகம், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் (பொறுப்பு) சேதுராமன், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் சேங்கைமாறன், திருப்புவனம் யூனியன் ஆணையாளர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சேதுராமு, பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்