தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி;

Update:2021-10-03 23:30 IST

சாலையில் சுற்றும் கால்நடைகள்

கோவை 80 அடி சாலையில் 2 இடங்களில் வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டிகள் நிரம்பி வழிவதால் அவற்றை சாப்பிட ஆடு, மாடு உள்ளிடட கால்நடைகள் கூட்டமாக திரிகின்றன. சில நேரங்களில் மாடுகள் சாலைகளில் செல்பவர்களை துரத்து கின்றன. எனவே சாலையில் சுற்றும் கால்நடைகளை பிடிக்க வேண்டும்.
 சுந்தர், ராமநாதபுரம்.

குடிநீர் வசதி ஏற்படுத்தப்படுமா?

  கோவை உக்கடம் பெரியக்குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் இங்கு ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். இங்கு பொதுமக்களின் தாகம் தணிக்க வாட்டர் ஏ.டி.எம். மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதில் குடிநீர் வருவது இல்லை. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  கதிர்வேலன், உக்கடம்.

சாக்கடை கால்வாய் தேக்கம்

  கோவை சிங்காநல்லூர் 64- வது வார்டு கக்கன் நகர் பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறா மல் தேங்கி சுற்றுப்புற சுகாதார பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை சரிசெய்து சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க வேண்டும்.
  மாரீஸ்வரன், சிங்காநல்லூர்.

போக்குவரத்து பாதிப்பு

  கோவைப்புதூர் செல்லும் புட்டு விக்கி சாலையில் பாதாள சாக்கடை பணிகள் மந்த நிலையில் நடைபெறுகிறது. தோண்டிப் போடும் பள்ளங்களும் மண் மூடிய பிறகு தார்சாலை அமைக்கவில்லை. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
  கோகுல பிரியா, கோவைப்புதூர்.

தெருநாய்கள் தொல்லை

  கவுண்டம்பாளையம் எஸ்.கே.ஆர். நகர் 4-வது வீதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் இங்கு உள்ள குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அச்சத்துடன் நடந்து செல்கிறார்கள். இதற்கு மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  ரபி, கவுண்டம்பாளையம்.

சுகாதார சீர்கேடு

  கோவை மாநகராட்சி 53-வது வார்டுக்கு உட்பட்ட நாராயணன் வீதியில் சில வீடுகளில் இருந்து செப்டிக் டேங்க் கழிவுகள் சாக்கடை கால்வாயில் கலக்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கடும் துர்நாற்றமும் வீசுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
  கிருஷ்ணன், மசக்களிபாளையம்.

இறைச்சி கழிவுகள்

  கோவை மாவட்டம் தொப்பம்பட்டி குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சர்வோதய காலனி பகுதியில் திறந்தவெளியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடும் நிலவுகிறது.
  எனவே பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் முன்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  மீனா, குருடம்பாளையம்.

உடைந்த நடைபாதை

  ஊட்டியில் படகு இல்லம் செல்லும் நடைபாதை சில இடங்களில் உடைந்து காணப்படுகிறது. இதனால் அதில் நடந்து செல்லும் பொதுமக்கள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் இறங்கி நடப்பதால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  ரவி, ஊட்டி.

தொற்றுநோய் பரவும் அபாயம்

  குன்னூர் ராஜாஜி நகரில் பொதுமக்கள் பயன்படுத்தும் நடை பாதையில் உள்ள படிக்கட்டுகள் மிகவும் பழுதடைந்து உள்ளது. இதனால் மழைக்காங்களில் பழுதடைந்த பகுதியின் வழியே மழைநீர் கழிவுநீருடன் கலந்து வீடுகளுக்குள் செல்கிறது. இதன் காரணமாக தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.
  அஸ்ரப் அலி, ராஜாஜி நகர், குன்னூர்.

பன்றிகள் தொல்லை

  போத்தனூர் அருகில் உள்ள மேட்டூர் அண்ணா நகர் ரெயில்வே லைன் பகுதியில் சாக்கடை வசதிகள் இல்லை. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இங்கு பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தப் பிரச்சினைகளை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  ராஜலட்சுமி, அண்ணாநகர்.

சேதமடைந்த சாலை

  கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள குமுதம் நகர், ஸ்ரீ விக்னேஷ் நகர் பகுதியில் சாலை மிகவும் சேதம் அடைந்து உள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். சில நேரங்களில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர். எனவே சாலை வசதி அமைக்க வேண்டும்.
  பாலசுப்பிரமணியம், விளாங்குறிச்சி.


மேலும் செய்திகள்