மதுரையில் ஒரே நாளில் 67 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

மதுரையில் நேற்று 4-வது கட்டமாக 1,150 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 67 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.;

Update:2021-10-04 01:17 IST
மதுரை,

மதுரையில் நேற்று 4-வது கட்டமாக 1,150 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 67 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி திருவிழா

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காகவும், பரவலை தடுப்பதற்காகவும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது. முதலில் முன்களப்பணியாளர்களான டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கும், அதன்பின்னர் 18 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி, 19-ந்தேதி, 26-ந்தேதி என தொடர்ந்து 3 வாரம் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மெகா தடுப்பூசி திருவிழா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அன்றைய தினங்களில் வழக்கத்தை விட அதிகமான நபர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தினர். மதுரையில் நடந்த முகாம்களிலும் அதிக அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
மதுரையில் 12-ந்தேதி நடந்த முகாம்களில் 1 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கும், 19-ந்தேதி நடந்த தடுப்பூசி முகாம்களில் 72 ஆயிரத்து 50 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுபோல், 26-ந்தேதி நடந்த முகாமில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 18 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம் மதுரையில் தடுப்பூசி செலுத்தியவர்களின் சதவிகிதம் வேகமாக அதிகரித்தது.

1,150 இடங்கள்

இதற்கிடையே தமிழகம் முழுவதும் மீண்டும் 4-வது கட்டமாக நேற்று 20 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறும் எனவும், 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அரசு அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.
மதுரையிலும் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1,150 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு முகாம்கள் நடந்தது. இந்த சிறப்பு முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசிகளை செலுத்தினர். இதுபோல், வீடு, வீடாகவும் சென்று அதிக அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

17 லட்சம்

நேற்று நடந்த இந்த சிறப்பு முகாம்களில் புறநகரில் 37 ஆயிரத்து 836 பேர், நகர் பகுதியில் 27 ஆயிரத்து 428 பேர், அரசு மருத்துவமனைகளில் 1,832 பேர் என மொத்தம் 67 ஆயிரத்து 96 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுரையில் இதுவரை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 23 ஆயிரத்தை எட்டி உள்ளது.
----

மேலும் செய்திகள்