கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே திடீர் தகராறில் கர்ப்பிணியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திடீர் தகராறு
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சென்றாம்பாளையம் கருப்பராயன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவருக்கு வீராச்சாமி, குணசேகரன் (வயது 19). என்ற மகன்களும், மாரியம்மாள் என்று மகளும் உள்ளார்கள். தற்போது மாரியம்மாள் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று முன்தினம் மாலை குணசேகரன் சென்றாம்பாளையம் கொண்டையம்மன் கோவில் முன் தன்னுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று திரும்பினார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த மணிவண்ணன், சுதந்திரன், மிலன், வசந்தகுமார், விஜய் ஆனந்த் ஆகிய 5 பேரும் சேர்ந்து குணசேகரனிடம் திடீரென தகராறில் ஈடுபட்டனர்.
கர்ப்பிணி மீது தாக்குதல்
மேலும் அவர்கள் 5 பேரும் சேர்ந்து குணசேகரனை கையால் அடித்து உதைத்து தாக்கினார்கள். இதனை கவனித்த குணசேகரின் அக்காள் மாரியம்மாள் அங்கு வந்து தடுக்க முயன்றார். அப்போது அந்த 5 பேரும் சேர்ந்து மாரியம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு பலமாக தாக்கியதாக தெரிகிறது. இதனால் அக்காள், தம்பி 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். பொதுமக்கள் வருவதை கண்டதும் அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதையடுத்து தாக்குதலில் காயம் அடைந்த கர்ப்பிணி உள்பட 2 பேரும் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
2 பேர் கைது
இதுகுறித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கர்ப்பிணி உள்பட 2 பேரை தாக்கியதாக சென்றாம்பாளையம் காட்டுநாயக்கர் காலனியை சேர்ந்த மணிவண்ணன் (26), மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்த சுதந்திரன் (23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள மிலன், வசந்தகுமார், விஜய் ஆனந்த் ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.