சிவபெருமான் வேடமணிந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு

கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தக்கோரி சிவபெருமான் வேடமணிந்து வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2021-10-04 16:19 GMT
திண்டுக்கல்:

குறைதீர்க்கும் கூட்டம் 

கொரோனாவால் பல மாதங்களாக நடைபெறாமல் இருந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. 

இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா உள்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் கொடுத்த மனுக்களை, கலெக்டர் வாங்கி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

இதற்கிடையே தமிழ்நாடு வண்ணார் எழுச்சி நலப்பேரவையினர் ஒரு மனு கொடுத்தனர். அதில் சின்னாளப்பட்டி, மேட்டுப்பட்டி, கீழக்கோட்டை, புதுக்கோட்டை, மேலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சலவை தொழிலாளர்கள் 103 பேருக்கு வீட்டுமனை பட்டா, இஸ்திரி பெட்டி கேட்டு 4 ஆண்டுகளாக மனு கொடுத்தோம். இதுவரை எதுவும் கிடைக்கவில்லை.

 சலவை தொழிலில் போதிய வருமானம் இல்லாமல் வாழ்க்கை நடத்தவே சிரமப்படுகிறோம். எனவே வீட்டுமனை பட்டா, இஸ்திரி பெட்டி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

சிவபெருமான் வேடம் அணிந்து...

மேலும் இந்து மக்கள் கட்சியினர் சிவபெருமான் வேடம் அணிந்த ஒருவருடன் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், வடமதுரையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் சிவன் கோவில், பக்த ஆஞ்சநேயர் கோவில்களுக்கு ஆகம விதிப்படி 12 ஆண்டுகள் ஆகியும் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. எனவே ஆகம விதிப்படி கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

மேலும் வாரத்தில் 3 நாட்கள் கோவில்களில் வழிபடுவதற்கு தடை விதிப்பதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இதேபோல் ரெட்டியார்சத்திரத்தில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி அருகே உள்ள மதுக்கடை, சீனிவாசபெருமாள் கோவில் தெப்பகுள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இந்து மக்கள் கட்சி குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

வேடபட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மைக்கேல்ராஜகுமார் கொடுத்த மனுவில், எனது தலைமையில் மாற்றுத்திறனாளிகள் சுயஉதவிக்குழு செயல்படுகிறது. 

திண்டுக்கல்லில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்தோம். அங்கு ரூ.2½ லட்சம் கடன் தருவதாக கூறி கையெழுத்து வாங்கி விட்டு ரூ.50 ஆயிரம் தான் தந்தனர். மீதமுள்ள பணத்தை குழு கணக்கில் இருப்பு தொகையாக வைக்கப்படும் என்றனர். அவ்வாறு எதுவும் செய்யவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்