பன்றி பண்ணையில் 20 லிட்டர் சாராயம் பறிமுதல்; தொழிலாளி கைது

தளவாபாளையம் அருகே பன்றி பண்ணையில் 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தொழிலாளி கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-10-07 19:00 GMT
நொய்யல்,
பன்றி பண்ணை
தளவாபாளையம் அருகே கிழக்கு தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலமுத்து. இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 30). இவர் கடந்த 10 ஆண்டுகளாக  சாலைத்தோட்டத்தில் உள்ள இடத்தில் வெள்ளை பன்றி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். 
இந்தநிலையில் கோபாலகிருஷ்ணன் தனது பண்ணை அருகே சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கும், கரூரில் உள்ள மதுவிலக்கு போலீசாருக்கும் ரகசிய தகவல் தெரிவித்தனர்.
சாராயம் பறிமுதல்
இதன்பேரில் வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் மற்றும் கரூர் மது விலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பன்றி பண்ணையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கோபாலகிருஷ்ணனின் அறையில் 20 லிட்டர் கள்ளச்சாராயம் கேனில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிறையில் அடைப்பு
போலீசார் வருவதை பார்த்த கோபாலகிருஷ்ணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும், பண்ணையில் வேலை செய்துவரும் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஓலப்பாளையம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கார்த்தி (23) என்பவரை மதுவிலக்கு  போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கரூரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தப்பி ஓடிய கோபாலகிருஷ்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்