விரைவில் தொடக்கம்: ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் முதியோர் பராமரிப்பு மையம் - டீன் டாக்டர் ஜெயந்தி தகவல்

ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் முதியோர் பராமரிப்பு மையம் விரைவில் தொடங்கப்படும் என டீன் டாக்டர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-09 02:15 GMT
சென்னை,

உலக மனநல நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 10-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் “அனைவரும் மனநலனை உறுதி செய்வோம்” என்ற கோட்பாட்டுடன் மனநல நாள் அனுசரிப்பு மற்றும் மனநலம் பேணுதல் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. 

இந்த கருத்தரங்கத்தை ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ஜெயந்தி தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘விரைவில் முதியோர் தினசரி பராமரிப்பு மையம் மற்றும் இளையோருக்கான இணையதள அடிமை மீட்பு மையம் தொடங்கப்படவுள்ளது. இந்த கொரோனா பேரிடர் காலத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவர்களுக்கு தொலைபேசி வாயிலாக 21 ஆயிரம் நோயாளிகளுக்கு மேல் மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மனநல மருத்துவ துறைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

இந்தநிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற அரசு மனநல காப்பக இயக்குனர் சத்தியநாதன், மருத்துவ கண்காணிப்பாளர் ராஜஸ்ரீ, கல்லூரி துணை டீன் சுகுணாபாய், மனநல டாக்டர் மலர் மோசஸ், ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்

மேலும் செய்திகள்