எழும்பூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் மின்சார ரெயில் சேவை பாதிப்பு

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் ½ மணி நேரம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

Update: 2021-10-10 04:26 GMT
சென்னை,

சென்னையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் திடீரென பலத்த மழை பெய்தது. எழும்பூர் பகுதியிலும் மழையின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த திடீர் மழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது.

மழையின்போது எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள மரம் ஒன்று திடீரென வேருடன் சாய்ந்து விழுந்தது. மரத்தின் கிளை ரெயில் நிலையத்தில் உள்ள உயர் மின் அழுத்த கம்பியில் விழுந்ததால், மின்கம்பி அறுந்து விழுந்தது. அறுந்த மின்கம்பியோடு மின்சார ரெயில்கள் செல்லும் தண்டவாளத்தில் மரக்கிளை விழுந்து கிடந்தது.

மின்சார ரெயில்கள் நிறுத்தம்

எழும்பூர் ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த ஊழியர்கள், தண்டவாளத்தில் மரம் விழுந்ததை கண்டனர். உடனடியாக ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை எழும்பூர்-தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வந்த மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

தண்டவாளத்தில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். மரம் வெட்டும் எந்திரம் கொண்டு தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை ரெயில்வே ஊழியர்கள் துண்டு, துண்டாக வெட்டி அகற்றினர். மேலும் கீழே அறுந்து விழுந்த உயர் மின் அழுத்த கம்பிகளையும் உடனடியாக சரி செய்தனர்.

½ மணி நேரம் தாமதம்

சுமார் அரைமணி நேரத்துக்கு பிறகு தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரம் முழுவதுமாக வெட்டி அகற்றப்பட்டது. இதையடுத்து மின்சார ரெயில் போக்குவரத்து தொடங்கியது. ஆங்காங்கே நிறுத்தி இருந்த மின்சார ரெயில்கள் மீண்டும் ஒன்றன்பின் ஒன்றாக இயக்கப்பட்டன.

சுமார் ½ மணி நேரத்துக்கும் மேலாக மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. நடுவழியில் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பணி முடிந்து வீட்டுக்கு சென்ற பயணிகள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.

மேலும் செய்திகள்