பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

பொதுமக்கள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர்.

Update: 2021-10-12 20:11 GMT
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறையில் இருந்து உடையார்பாளையம் செல்லும் சாலையில் உள்ள பாளையத்தார் ஏரி கடந்த ஆண்டு தூர்வாரப்பட்டது. மேலும் ஏரியை முழுமையாக அளந்து அத்துக்கல் நடப்பட்டது. இந்நிலையில் அந்த ஏரிக்கு அருகே வசிக்கும் சமத்துவபுரம் கிராம மக்களுக்கு சமத்துவபுரத்தின் கிழக்குப்பகுதியில் சுடுகாடு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த சுடுகாட்டிற்கு செல்லும் பாதை செப்பனிடப்படாததால் அந்த சுடுகாட்டை பயன்படுத்தாமல், ஏரியின் ஒரு பகுதியில் பயன்படுத்தி வந்தனர். மேலும் அந்த ஏரியில் சுடுகாடு செல்ல மற்றும் வரத்து வாய்க்காலில் பாலம் அமைத்துத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் இறந்த நிலையில் அவரை அடக்கம் செய்வதில் சிரமம் இருப்பதாக கூறி, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே திடீரென பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) சந்தானம் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்ததன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.இந்த நிலையில் செந்துறை கிராம நிர்வாக அதிகாரி செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மறியலில் ஈடுபட்டதாக 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து செந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்