வருகிற 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

சேலம் மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி பள்ளிகள் திறக்க உள்ளதால் அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை மேற்கொண்டார்.

Update: 2021-10-18 20:48 GMT
சேலம்
ஆலோசனை கூட்டம்
சேலம் மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி முதல் அனைத்து பள்ளிகளையும் திறப்பதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கல்வித்துறை உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிற 1-ந் தேதி முதல் அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளை தொடங்கவும், பள்ளிக்கல்வித்துறை அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
மருத்துவ பரிசோதனை
சேலம் மாநகராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகள், குடிநீர் தொட்டிகள், கழிவறைகள் மற்றும் பள்ளி வளாகம் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டு போதிய அளவு கிருமி நாசினி தெளித்திடவும், தினமும் பள்ளி தொடங்குவதற்கு முன்பும், பள்ளி முடிந்த பின்பும் இரு வேளைகளிலும் கிருமி நாசினி தெளிக்க தக்க ஏற்பாடுகளை தொடர்புடைய அலுவலர்கள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் மருத்துவ குழுக்கள் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும், கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அனைத்து பள்ளிகளிலும் வைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திட சிறப்பு முகாம் ஏற்படுத்திட சுகாதாரத்துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
வாகனங்கள் தணிக்கை
விடுதிகளில் மாணவர்கள் தங்கும் அறை, சமையலறை, குடிநீர் தொட்டிகள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு குளோரினேசன் செய்யப்படுவதையும், கழிப்பறைகள் மற்றும் விடுதி வளாகம் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்படுவதையும் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி திறப்பதற்கு முன் அனைத்து தனியார் பள்ளிகளின் போக்குவரத்து வாகனங்கள் தணிக்கை செய்து நல்ல முறையில் உள்ளதையும், தனியார் பள்ளிகளின் போக்குவரத்து வாகனங்களில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுவதையும், சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்