ஆற்றில் மூழ்கி மேலும் ஒருவர் பல

திருவட்டார் அருகே ஆற்றில் மூழ்கி மேலும் ஒருவர் பலியானார்.

Update: 2021-10-18 21:02 GMT
திருவட்டார்,
திருவட்டார் அருகே ஆற்றில் மூழ்கி மேலும் ஒருவர் பலியானார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மழைக்கு மேலும் ஒருவர் பலி
குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளம் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. குளச்சல் அருகே குறும்பனை பகுதியில் நிஷான் என்ற பிளஸ்-2 மாணவன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டும், அருமனை அருகே முழுக்கோடு பகுதியை சேர்ந்த ஜெயன் (வயது 18) என்ற மாணவன் குளத்தில் மூழ்கியும் பரிதாபமாக இறந்தனர். இவர்கள் இருவரும் குளிக்க சென்ற போது இந்த சோக சம்பவம் நடந்தது.
மேலும் காளிகேசம் பகுதியில் தற்காலிக பாலத்தை கடக்க முயன்ற போது காட்டாற்று வெள்ளத்தில் சித்திரைவேல் என்பவர் அடித்து செல்லப்பட்டார். 3 நாட்களாக தேடியும் அவருடைய கதி என்னவென்று தெரியவில்லை. இதனால் அவர் வெள்ளத்தில் சிக்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தநிலையில் மழைக்கு மேலும் ஒருவர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
மாற்றுத்திறனாளி
அதாவது, திருவட்டார் அருகே மடத்துவிளையை சேர்ந்தவர் ஜெயபால். இவருடைய மகன் லெனின் (வயது 29). மாற்றுத்திறனாளியான இவர் வெல்டிங் வேலை செய்து வந்தார்.
நேற்றுமுன்தினம் மாலையில் இவருடைய வீட்டில் இருந்த கோழிகளை காணவில்லை. உடனே, கோழிகளை தேடி பார்த்து விட்டு ஆற்றில் குளிக்க போவதாக லெனின், குடும்பத்தினரிடம் கூறி விட்டு சென்றுள்ளார்.
ஆற்றில் மூழ்கி சாவு
ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் தேடிபார்த்தனர். இரவாகியும் அவரை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை.
இந்தநிலையில் நேற்று காலையில் ஆற்றங்கரையோரம் உள்ள வாழை தோட்டத்தில் லெனின் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், குளிப்பதற்காக சென்ற அவரை ஆற்று வெள்ளம் அடித்து செல்லப்பட்டதால், தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் பிறகு அவரது உடல் கரையோரம் உள்ள வாழை தோட்டத்தில் ஒதுங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்