செல்பி எடுத்தபோது கே.ஆர்.எஸ். அணையில் தவறி விழுந்த இளம்பெண்

ஸ்ரீரங்கப்பட்டணா அருகே செல்பி எடுத்தபோது இளம்பெண் ஒருவர் கே.ஆர்.எஸ். அணையில் தவறி விழுந்தார். அவரை மீனவர் ஒருவர் பத்திரமாக மீட்டார்.

Update: 2021-10-18 21:32 GMT
மண்டியா: ஸ்ரீரங்கப்பட்டணா அருகே செல்பி எடுத்தபோது இளம்பெண் ஒருவர் கே.ஆர்.எஸ். அணையில் தவறி விழுந்தார். அவரை மீனவர் ஒருவர் பத்திரமாக மீட்டார். 

செல்பி மோகம்

செல்போனில் செல்பி எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிடும் ஆர்வ இன்றைய இளைஞர்கள் இடையே அதிகரித்து வருகிறது. எந்த இடத்தில் செல்பி எடுக்கவேண்டும் என்று யோசிப்பதில்லை. ஆபத்து ஏற்படும் என்று கூட பார்க்காமல் செல்பி எடுக்கும் வகையில் மோகம் அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் நேற்று மைசூருவை அடுத்துள்ள கூர்காளியை சேர்ந்த ஆஷா(வயது21) என்ற இளம்பெண், தனது கணவர் சந்தோசுடன் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு சுற்றுலா சென்றார். சுமார் 50 அடி உயரத்தில் அணையின் தடுப்புச்சுவரில் நின்றபடி செல்பி எடுக்க ஆஷா முயன்றுள்ளார்.

தவறி விழுந்தார்

அப்போது எதிர்பாராத விதமாக அவர் கால் தவறி அணையில் விழுந்தார். உடனே அங்கிருந்த மீனவர் ஒருவர் அணையில் குதித்து ஆஷாவை மீட்டு பத்திரமாக கரை சேர்த்தார். அணையில் விழுந்ததால், சிறிய காயம் அடைந்த ஆஷா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் கே.ஆர்.எஸ். அணை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்