இரவு நேர உணவு முறையில் மாற்றம்: சென்னை அம்மா உணவகங்களில் சப்பாத்தி விற்பனை நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இரவு நேரத்தில் சப்பாத்தி விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறது. அதற்கு பதிலாக இட்லியும், தக்காளி சாதமும் வழங்கப்பட்டு வருகிறது.

Update: 2021-10-20 03:25 GMT
சென்னை,

ஏழை-எளியோர் மலிவு விலையில் வயிறார சாப்பிடும் வகையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது, அம்மா உணவகங்கள். அதன்படி தினந்தோறும் 3 வேளைகளிலும் ஏழை மக்களுக்கு சுடச்சுட உணவு வழங்கப்பட்டு வருகிறது. காலையில் இட்லி ரூ.1-க்கும், மதிய வேளைகளில் எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை சாதம், சாம்பர் சாதம், தக்காளி சாதம் என கலவை சாதங்கள் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.3-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இரவு வேளையில் சப்பாத்தி (2 எண்ணிக்கையில்) ரூ.3-க்கு வழங்கப்படுகிறது.

ஏழை எளியோரின் அட்சய பாத்திரமாக அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா காலத்தில் அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இதற்கிடையில் தி.மு.க. ஆட்சி அமைந்தாலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் ஏழை எளியோரின் நலனுக்காக அம்மா உணவகங்கள் தொடர்ந்து வழக்கம்போலவே இயங்கி வந்தன.

சென்னையில் வார்டுக்கு 2 வீதம் 200 வார்டுகளில் 400 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. இதுதவிர ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி என நகரில் உள்ள 7 அரசு ஆஸ்பத்திரிகளிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அம்மா உணவகங்களுக்கான நிர்வாக பொறுப்பு பெருநகர சென்னை மாநகராட்சியின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அம்மா உணவகங்களில் இரவு வேளையில் சப்பாத்தி விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறது. அதற்கு பதிலாக தக்காளி சாதம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுகிறது. சில உணவகங்களில் இட்லியும், தக்காளி சாதமும் வழங்கப்படுகின்றன. அம்மா உணவகங்களுக்கு கோதுமை சப்ளை நிறுத்தப்பட்டு இருப்பதால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

அதேபோல அம்மா உணவகங்கள் மூலம் மாநகராட்சிக்கு ரூ.300 கோடி வரை இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அம்மா உணவகங்களின் மூலம் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்கும் முயற்சியாக சப்பாத்திக்கான கோதுமை மாவு வழங்குவது நிறுத்தப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

நிதி நெருக்கடியை காரணமாக கூறி சப்பாத்தி விற்பனை நிறுத்தப்பட்டிருப்பது மக்களிடையே சற்று வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து மூத்த குடிமக்கள் கூறுகையில், ‘எங்களில் பலர் சர்க்கரை வியாதிகாரர்கள் என்பதால் இரவில் சப்பாத்தி சாப்பிடுவது உற்சாகத்தை தந்தது. இந்தநிலையில் அம்மா உணவகங்களில் சப்பாத்தி நிறுத்தப்பட்டிருப்பது வருத்தத்தை தருகிறது. இரவு வேளையிலும் இனி அரிசி சாதத்தையே சாப்பிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது’’, என்றனர்.

மேலும் செய்திகள்