விபத்தை ஏற்படுத்தும் திறந்தவெளி தொட்டிகள் மூடப்படுமா

கூடலூர் அரசு பள்ளி சாலையோரத்தில் விபத்தை ஏற்படுத்தும் திறந்தவெளி தொட்டிகள் மூடப்படுமா? என்று மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2021-10-22 13:25 GMT
கூடலூர்

கூடலூர் அரசு பள்ளி சாலையோரத்தில் விபத்தை ஏற்படுத்தும் திறந்தவெளி தொட்டிகள் மூடப்படுமா? என்று மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

அரசு பள்ளி

கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 2,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதன் அருகே தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு மாணவர்கள் மற்றும் மாணவிகள் விடுதிகள் உள்ளன. இதனால் அங்குள்ள சாலையில் காலை, மதியம், மாலை வேளைகளில் ஏராளமான மாணவ-மாணவிகள் நடந்து செல்கின்றனர். மேலும் வாகனங்களும் அதிகளவில் இயக்கப்படுகிறது.

இதற்கிடையில் கூடலூர் நகர மக்களின் தேவைக்காக ஓவேலியில் உள்ள தடுப்பணைகளில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது.

திறந்தவெளி தொட்டிகள்

இதற்காக அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு உள்ள சாலையின் இருபுறமும் குழாய்களில் செல்லும் தண்ணீரின் அளவை கணக்கிடவும், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிப்பதற்காகவும் வால்வுகள் கொண்ட சிறிய திறந்தவெளி தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது. 

தில் ஒரு தொட்டி சிமெண்டால் பூசப்பட்டு உள்ளது ஆனால் மேல் மூடி சரிவர அமைக்கப்படவில்லை. மற்றொரு தொட்டி திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக பள்ளிக்க்கு வரும் மாணவ-மாணவிகள் அங்குள்ள திறந்தவெளி தொட்டிகளுக்குள் தவறி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் ஆட்டோ உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன.

மாணவர் காயம்

இந்த நிலையில் நேற்று காலையில் பள்ளிக்கு நடந்து வந்த மாணவர் ஒருவர், தொட்டியில் தவறி விழுந்ததில் தாடையில் காயம் ஏற்பட்டது.
இதை கண்ட ஆசிரியர்கள் உடனடியாக அந்த மாணவரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். 

இந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்று கடந்த 1 மாதத்துக்கு முன்பு ஆசிரியர் ஒருவர், அங்குள்ள தொட்டிக்குள் தவறி விழுந்ததில் காலில் படுகாயம் ஏற்பட்டது. எனவே விபத்தை ஏ்றபடுத்தும் அங்குள்ள திறந்தவெளி தொட்டிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மேலும் செய்திகள்