உரங்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க வேண்டும்

விவசாயத்திற்கு தேவையான உரங்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-10-22 16:26 GMT
தொண்டி, 
விவசாயத்திற்கு தேவையான உரங்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மனு
ராமநாதபுரம் மாவட்ட விவசாயத்திற்கு தேவையான அடி உரங்களை உடனடியாக இறக்குமதி செய்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில துணைத்தலைவர் எம்.முத்துராமு தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். 
அதில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் சில பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக நெல் விதைப்பு பணியை உரிய நேரத்தில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நெல் விதைப்பு பணியை மேற்கொள்ள விவசாயிகள் கூடுதல் செலவு செய்துள்ளனர்.
அடி உரம் 
தற்போது நெல் விதைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து மாவட்டம் முழுவதும் பயிர்கள் முளைத்துள்ளன. தற்போது அடி உரம் போடுவதற்கு உரிய தருணமாக உள்ளதால் கூட்டுறவு சங்கங்களில் டி.ஏ.பி. காம்ப்ளக்ஸ் போன்ற தேவையான அடி உரங்கள் கிடைக்கவில்லை. 
மேலும் உரம் கிடைப்பதற்கு கூட்டுறவு சங்கங்கள் எந்த உறுதியும் அளிக்க மறுக்கின்றனர். இதனால் விவசாயத்திற்கு தேவையான நேரத்தில் உரம் போட முடியாத அவல நிலை ஏற்பட்டுஉள்ளது.  மாவட்டத்தில் மட்டும் கூட்டுறவுதுறையின் அலட்சியத்தால் உரம் கிடைக்காததால் விவசாயிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
நடவடிக்கை
 குறிப்பாக கூட்டுறவு சங்கத்தில் பியிர்கடன் வாங்கும் விவசாயிகளும் கூட அடி உரம் கிடைக்காமல் அவதிப் படுகின்றனர். எனவே தமிழக அரசும், மாவட்ட கலெக்டரும் ராமநாதபுரம் மாவட்ட விவசாயத்திற்கு தேவையான டி.ஏ.பி. காம்ப்ளக்ஸ் போன்ற அடி உரங்களை இறக்குமதி செய்து உடனடியாக அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்