மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணியின் போது 40 அடி உயரத்தில் இருந்து ராட்சத எந்திரம் விழுந்ததால் பரபரப்பு

பெங்களூருவில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணியின் போது 40 அடி உயரத்தில் இருந்து ராட்சத எந்திரம் விழுந்ததால் பரபரப்பு உண்டானது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் உயிர் தப்பினார்கள்.

Update: 2021-10-24 21:53 GMT
பெங்களூரு:

ராட்சத எந்திரம் விழுந்தது

  பெங்களூருவில் பையப்பனஹள்ளி முதல் கெங்கேரி வரையும், நாகசந்திராவில் இருந்து எலச்சனஹள்ளி வரையும் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சில்க் போர்டில் இருந்து கே.ஆர்.புரம் வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மெட்ரோ தூண்களுக்கு மேலே ராட்சத எந்திரம் மூலமாக சிலாப்புகளை தூக்கி வைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

  இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். நேற்று காலையில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் வழக்கம் போல நடைபெற்றது. அப்போது காலை 6.30 மணியளவில் சில்க் போர்டு அருகே மெட்ரோ தூண்களுக்கு மேல் வைக்கப்பட்டு இருந்த ராட்சத எந்திரம் திடீரென்று சரிந்து பாதியளவுக்கு கீழே விழுந்தது.

40 அடி உயரத்தில் இருந்து...

  அதாவது 40 அடி உயரத்தில் இருந்து அந்த ராட்சத எந்திரம் விழுந்திருந்தது. எந்திரம் விழுந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் தொழிலாளர்கள் யாரும் இல்லை என்று தெரியவந்தது. இதனால் அதிர்ஷ்டவசமாக ஏராளமான தொழிலாளர்கள் உயிர் தப்பித்து இருந்தனர். சம்பவம் நடந்து பல மணிநேரம் ஆகியும் மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. பல மணிநேரம் கழித்தே அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

  அப்போது தொழிலாளர்களின் அலட்சியம் காரணமாக தான் ராட்சத எந்திரம் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்திருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் போது ராட்சத எந்திரம் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்