சென்னை பட்டினப்பாக்கத்தில் இளம்பெண் தற்கொலை வழக்கில் போலீஸ்காரர் கைது

சென்னை பட்டினப்பாக்கத்தில் இளம்பெண் தற்கொலை வழக்கில் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-10-26 07:43 GMT
சென்னை,

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரி (வயது 27). இவருடைய கணவர் கபில்தேவ். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். விக்னேஸ்வரி, பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையில் டிபன் கடை நடத்தி வந்தார்.

அப்போது அவருக்கும், பட்டினப்பாக்கம் முள்ளிமா நகர் பகுதியை சேர்ந்தவரான நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரர் முகிலனுக்கும் (42) கடந்த ஓராண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இதனால் விக்னேஸ்வரி-கபில்தேவ் இடையேயான கணவன்-மனைவி உறவில் விரிசல் விழுந்தது. இருவருக்கும் இடையே குடும்ப நலக்கோர்ட்டில் விவகாரத்து வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிகிறது.

இந்தநிலையில் விக்னேஸ்வரியும், போலீஸ்காரர் முகிலனும் ஒன்றாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 23-ந் தேதி இரவு விக்னேஸ்வரி, மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

விக்னேஸ்வரி சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது சாவுக்கு போலீஸ்காரர் முகிலன்தான் காரணம் என்றும் குற்றம்சாட்டி விக்னேஸ்வரியின் உறவினர்கள் பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ்காரர் முகிலனிடம் பட்டினப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் போலீஸ்காரர் முகிலன் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

சம்பவத்தன்று நானும், விக்னேஸ்வரியும் ஒன்றாக இருந்தோம். அப்போது அவர், என்னிடம் தனது கணவர் கபில்தேவ் அடிக்கடி தகராறு செய்கிறார். நீங்கள் போலீசாக இருந்தும் தட்டிக்கேட்க மாட்டீர்களா? என்று கூறி வாக்குவாதம் செய்தார். நான் அவரிடம், ‘விவகாரத்து வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் கபில்தேவ் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம்’ என்று கூறினேன்.

ஆனால் அவர் ஏற்காமல் தொடர்ந்து வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். பின்னர் நான் கழிப்பறைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, விக்னேஸ்வரி, மின்விசிறியில் புடவையை கட்டி தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். உடனடியாக நான் புடவை முடிச்சை அவிழ்ப்பதற்கு முயற்சித்தேன். ஆனால் அதற்குள் அவரது உயிர் பிரிந்து விட்டது.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் பட்டினப்பாக்கம் போலீசார் விக்னேஸ்வரியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் முகிலனை கைது செய்தனர். அவரை, சைதாப்பேட்டை 18-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்