3,085 சிலைகள் பாதுகாப்பு அறை கட்டி முடிக்கப்படும்

தமிழகம் முழுவதும் விரைவில் 3,085 சிலைகள் பாதுகாப்பு அறை கட்டி முடிக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Update: 2021-10-26 17:33 GMT
திருவாரூர்:
தமிழகம் முழுவதும் விரைவில் 3,085 சிலைகள் பாதுகாப்பு அறை கட்டி முடிக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார். 
கமலாலய குளம்
திருவாரூரில் பெய்த பலத்த மழை காரணமாக தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலய குளத்தின் தென்கரையில் 100 மீட்டர் அளவு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. 
இதனைத்தொடர்ந்து இடிந்து விழுந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் சவுக்கு மரங்கள் கொண்டு தடுப்பு அமைத்து மண் மூட்டைகள் அடுக்கி வைத்தனர்.  
அமைச்சர் ஆய்வு
திருவாரூரில் கமலாலய குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த தகவல் அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை தொடர்பு கொண்டு சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய அறிவுறுத்தினார். 
இதனைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நேற்று கமலாளய குளத்தின் சுற்றுச்சுவரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வல்லுனர்கள் குழு
திருவாரூர் கமலாலய குளத்தின் சுற்றுச்சுவர் 101 அடி அளவில் இடிந்து விழுந்ததை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.  ஏற்கனவே கடந்த 2012 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் 2 முறை கமலாலய குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சீரமைக்கப்பட்டு உள்ளது. தற்போது 101 அடி அளவுக்கு மதில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. 
மேலும் 40 அடி அளவுக்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. கமலாலய குளத்தின் சுற்றுச்சுவரின் உறுதி தன்மை குறித்து வல்லுனர்கள் குழு மூலம் ஆய்வு செய்யப்படும். குளத்தின் கரையை சீரமைக்க போதிய அளவு நிதி பெற்று நிரந்தர தீர்வு காண முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 
3,085 சிலைகள் பாதுகாப்பு அறைகள்
திருவாரூரில் உள்ள கல் தேரை சுற்றி மரங்களை நடுவது, செடிகளை நடுவது போன்ற பணிகள் நடைபெற்று உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்தவர்கள் காணாமல் போன சிலைகளை கண்டுபிடித்ததை விட கடந்த 5 மாதங்களில் நாங்கள் 40 சதவீதம் அதிக அளவு சிலைகளை கண்டுபிடித்து உள்ளோம். 
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஐடியல் குழுவினரோடு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்்கும் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட சிலைகளின் எண்ணிக்கை விவரங்களை தி.மு.க.வின் ஒரு ஆண்டு ஆட்சி நிறைவின்போது முதல்-அமைச்சர் தெரிவிப்பார். தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 85 சிலைகள் பாதுகாப்பு அறைகள் விரைவில் கட்டி முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், உதவி கலெக்டர் பாலச்சந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் பிரகாஷ், நகராட்சி ஆணையர் பிரபாகரன், உதவி ஆணையர் ஹரிகரன், கோவில் செயல் அலுவலர் கவிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்