ஓய்வு பெற்ற அதிகாரியை கட்டிப்போட்டு ரூ.4¼ லட்சம்-நகை கொள்ளை

பட்டப்பகலில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரை கட்டிப்போட்டு மர்மநபர்கள் ரூ.4¼ லட்சம், நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-10-26 19:19 GMT
அருப்புக்கோட்டை, 
பட்டப்பகலில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரை கட்டிப்போட்டு மர்மநபர்கள் ரூ.4¼ லட்சம், நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி லட்சுமி நகரில் வசித்து வருபவர் கணேசன் (வயது 78). ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர். இவருடைய மனைவி கனகம்மாள். இவர் இரண்டு மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். 
ஆதலால் கணேசன் வீட்டில் தனியாக வசித்து வந்தார். தற்போது கணேசன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மாலை 4 மணிக்கு அவரது வீட்டிற்கு காரில் வந்த மர்மநபர்கள் 5 பேர் கணேசனிடம் இடம் ஏதேனும் விற்பனைக்கு உள்ளதா? என கேட்டு வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
நகை-பணம் கொள்ளை 
அவர் பேசிக்கொண்டிருந்த போதே கணேசனின் வாயை திடீரென மர்மநபர்கள் பொத்தினர். 
பின்னர் அவர்கள், கணேசனின் கையை கட்டிபோட்டு கத்தியை காட்டி மிரட்டி பீரோவில் இருந்த ரூ.4¼ லட்சம், 5 பவுன் நகை ஆகியவற்றை ெகாள்ளையடித்து கொண்டு அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டனர். பின்னர் கணேசனின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கட்டை அவிழ்த்துவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
பட்டப்பகலில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரை கட்டிப்போட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்