பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா இன்று தொடங்குகிறது

பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

Update: 2021-10-27 16:50 GMT
கமுதி, 

பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

தேவர் குருபூஜை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி விழா மற்றும் 59-வது குருபூஜை விழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கி  நாளை மறுநாள் வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. 
குருபூஜையையொட்டி கடந்த 25-ந்தேதி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் தேவரின் தங்ககவசத்தை நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜனிடம் ஒப்படைத்தார்.
போலீஸ் பாதுகாப்புடன் மதுரையில் இருந்து தங்ககவசம் எடுத்து வரப்பட்டு, பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அணிவிக்கப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

யாகசாலை பூஜை

தேவர் குருபூஜை இன்று தொடங்குவதையொட்டி அதிகாலை 5 மணி அளவில் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் தங்கவேல், சத்தியமூர்த்தி, பழனி ஆகியோர் முன்னிலையில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜை நடத்துகிறார்கள். ஆன்மிக சொற்பொழிவும் நடைபெறுகிறது.
 
மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

அதன்பின்னர் பொதுமக்கள் தேவர் நினைவிடம் முன்பு பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள். நாளை(29-ந் தேதி) தேவரின் அரசியல் விழா நடைபெறுகிறது. 
30-ந் தேதி குருபூஜை விழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள் அஞ்சலி செலுத்த வருகிறார்கள். இதையொட்டி முன்ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உள்ளிட்ட அதிகாரிகள் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்