க.பரமத்தி ஒன்றியக்குழு கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

க.பரமத்தி ஒன்றியக்குழு கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2021-10-28 18:56 GMT
க.பரமத்தி,
ஒன்றியக்குழு கூட்டம்
க.பரமத்தி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் மார்க்கண்டேயன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் குழந்தைசாமி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் மத்திய அரசின் 15-வது மானியக்குழு நிதியில் இருந்து ரூ.1 கோடியே 6 லட்சம் க.பரமத்தி ஒன்றியத்திற்கு வந்துள்ளது.
இதனை ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்கள் பகுதியில் அடிப்படை வசதி மேற்கொள்ள சரி சமமாக பிரித்துக்கொள்ளுமாறு ஒன்றியக்குழு தலைவர் கூறினார்.
வெளிநடப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கவுன்சிலரும், க.பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளருமான கருணாநிதி கூறுகையில், ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில் மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் 9 கவுன்சிலர்கள் உள்ளோம். ஒன்றியத்தில் தி.மு.க. கவுன்சிலர்களின் எண்ணிக்கை மெஜாரிட்டியாக உள்ளது. எனவே எங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என கூறினார். இதற்கு ஒன்றியக்குழு தலைவர் மறுப்பு தெரிவித்து அவ்வாறு நிதி ஒதுக்க முடியாது என கூறினார்.
இதையடுத்து தி.மு.க. கவுன்சிலர்கள் 9 பேரும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மான நோட்டில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டம் நடைபெறாமல் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்