பெரம்பலூர் கலெக்டர் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினரால் பரபரப்பு

பெரம்பலூர் கலெக்டர் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-11-08 20:53 GMT
பெரம்பலூர்:

கலெக்டர் முன்பு தர்ணா
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இந்நிலையில் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்த குன்னம் தாலுகா, கல்லை கிழக்கு தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் மூர்த்தி (வயது 22) திடீரென்று தனது அக்காள் ஆனந்தசெல்வி மற்றும் சித்தப்பா முருகேசன் ஆகியோருடன் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்த அரங்கில் கலெக்டர் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு நிலம் ஆக்கிரமிப்பு
அப்போது மூர்த்தி கூறுகையில், எனது வீட்டின் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் தனிநபர்கள் 4 பேர் சேர்ந்து ஆக்கிரமித்து தகர கொட்டகை அமைத்துள்ளனர். இதனால் எங்கள் வீட்டிற்கு செல்ல முடியவில்லை. ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏற்கனவே கொடுத்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை கண்டித்தும், ஆய்வு செய்து விசாரணை நடத்தி அந்த ஆக்கிரமிப்பை அகற்றவும், ஆக்கரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் உத்தரவிட வேண்டும், என்றார்.
தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம், இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறியதை தொடர்ந்து, அவர்கள் தர்ணாவை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.
141 மனுக்கள்
பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தாங்கள் கட்டிய பணத்தை அந்த தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 141 மனுக்களை பெற்ற கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்