மதுரையில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பி ஓட்டம

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பி ஓடினார். பணியில் கவனக்குறைவாக இருந்ததாக 2 ேபாலீஸ் ஏட்டுகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2021-11-12 17:59 GMT
ராமநாதபுரம், 

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பி ஓடினார். பணியில் கவனக்குறைவாக இருந்ததாக 2 ேபாலீஸ் ஏட்டுகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள நாகாச்சி தேவர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிசாமி. இவருடைய மகன் மாரீஸ்வரன் என்ற நண்டு (வயது 20).இவர் கடந்த ஜூன் மாதம் உச்சிப்புளி அருகே உள்ள பேக்கரி ஒன்றில் திருடியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில் இவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உடலில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாக உச்சிப்புளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று மாரீஸ்வரனை கைது செய்தனர். சிகிச்சையில் இருந்து வந்த அவர் அறுவை சிகிச்சைக்குபின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

கைதி தப்பி ஓட்டம்

அவருக்கு உச்சிப்புளி போலீஸ் ஏட்டு தாமோதரன், ராமேசுவரம் கோவில் போலீஸ் நிலைய ஏட்டு ராமமூர்த்தி ஆகியோர் பாதுகாப்புக்கு இருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலையில், 2 போலீசாருக்கும் தெரியாமல் மாரீஸ்வரன், அங்கு வந்த நாகாச்சியை சேர்ந்த 2 நபர்களுடன் நைசாக ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடி விட்டார். 
இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தப்பி ஓடிய மாரீஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.

பணியிடை நீக்கம்

இந்த விவகாரத்தில் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக ஏட்டுகள் தாமோதரன் மற்றும் ராமமூர்த்தி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று இரவு தப்பி ஓடிய கைதி மாரீஸ்வரன் உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தான். அவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்