சூர்யா, ஜோதிகாவை கைது செய்யக் கோரி பா.ம.க.வினர் மனு

நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகாவை கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ம.க.வினர் மனு அளித்தனர்.

Update: 2021-11-20 18:46 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை நேற்று பா.ம.க.வினர் மாநில துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டி.கே.ராஜா தலைமையில் முற்றுகையிட்டனர்.

 பின்னர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சமீபத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்த அமேசான் வெளியிட்ட திரைப்படம் ஜெய்பீம். இந்த திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சாதி பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் படமெடுத்த நடிகர் சூர்யா மற்றும் அவருடைய மனைவி ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோரை கைது செய்து படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர்கள் கூறியிருந்தனர். 

அப்போது பா.ம.க. மாநில துணைத் தலைவர் பொன்னுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன், ஊராட்சி மன்ற தலைவர் பிரேமலதாசிவா, மாநில மகளிரணி தலைவி நிர்மலா, அமைப்புச் செயலாளர் குட்டிமணி உள்பட பலர் உடனிருந்தனர். 

இதேபோல திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் நகர செயலாளர் கராத்தே சிவா தலைமையிலும், தாலுகா போலீஸ் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பிரேமலதா சிவா தலைமையிலும் ஜோதிகா, சூர்யா, ஞானவேல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ம.க.வினர் புகார் மனு அளித்தனர். 

பின்னர் கைது செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பினர் இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்