டேங்கர் லாரி கிளினர் திடீர் சாவு

நொய்யல் அருகே டேங்கர் லாரி கிளினர் திடீரென இறந்தார். இதையடுத்து டிரைவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-11-22 18:12 GMT
கரூர்
நொய்யல்
லாரி கிளீனர் 
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (வயது 59.) இவர் டீசல், பெட்ரோல் நிரப்பி செல்லும் டேங்கர் லாரியில் கிளீனராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று டேங்கர் லாரியில் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்காக பாரத் பெட்ரோலியம் பகுதியில் உள்ள புதிய லாரி பார்க்கிங்கில் லாரியை நிறுத்திவிட்டு காத்திருக்கும் போது செல்வமணிக்கு நேற்று மாலை 3.30 மணி அளவில் திடீரென வலிப்பு ஏற்பட்டு பின்னர் சரியானது. 
சாவு
அதனைத்தொடர்ந்து மாலை சுமார் 4.30 மணி அளவில் கிளீனர் செல்வ மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த மற்ற டிரைவர்கள், கிளீனர்கள் பாரத் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகளிடம் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் கேட்ட போது அவர்கள் காலதாமதமாக ஆம்புலன்சை எடுத்து வருவதற்குள் இறந்து விட்டார்.
முற்றுகை
இதனால் பார்க்கிங்கில் இருந்த மற்ற டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் காலதாமதமாக ஆம்புலன்ஸ் வந்ததால் தான் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற முடியாமல் கிளீனர் செல்வமணி இறந்து விட்டதாக கூறி பாரத் பெட்ரோலியம் நிறுவன நுழைவாயில் முன்பு பாரத் பெட்ரோலியம் நிர்வாகத்தை கண்டித்து மாலை 6.30 மணி முதல் லாரிகளை இயக்காமல் சுமார் 100-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் கிளீனர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 
பேச்சுவார்த்தை 
இதுகுறித்து தகவலறிந்த பசுபதி பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். செல்வமணியின் உடல் பார்க்கிங் ஏரியாவில் வைக்கப்பட்டுள்ளது.  இறந்த செல்வகுமாரின் உறவினர்கள் பாரத் பெட்ரோலிய வளாகத்திற்கு வந்தனர். அவர்களிடம் பாரத் பெட்ரோலிய நிர்வாக அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்