அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் உண்ணாவிரதம்

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-22 21:16 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூரில் சி.ஐ.டி.யு. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழக பணிமனை பெரம்பலூர் கிளை முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மத்திய சங்க செயலாளர் சிங்கராயர் தலைமை தாங்கினார். சங்கத்தின் கிளை தலைவர் சரவணன், செயலாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் அகஸ்டின் தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் சிவானந்தம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அரசு போக்குவரத்து கழகத்தின் வரவுக்கும், செலவிற்குமான வித்தியாச தொகையை வழங்கிட வேண்டும். 14-வது ஊதிய பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். படித்தொகை, ஊக்கத்தொகை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். ஓய்வுபெற்றோர் பணப்பலன், 72 மாத அகவிலைப்படி நிலுவை தொகை, அகவிலைப்படி உயர்வு மற்றும் மருத்துவ காப்பீட்டை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டத்தை மாலை 5 மணிக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் சிற்றப்பழம் முடித்து வைத்தார்.

மேலும் செய்திகள்