வைகை அணையில் இருந்து 5,119 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

பலத்த மழை எதிரொலியாக, வைகை அணையில் இருந்து 5,119 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 5 மாவட்ட மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-24 16:40 GMT
ஆண்டிப்பட்டி:


வைகை அணை 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. 71 அடி உயரம் கொண்ட இந்த அணை கடந்த 15 நாட்களுக்குள் 3 முறை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வருகிற தண்ணீர், அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. 

அதன்படி கடந்த வாரத்தில் வைகை அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. அணைக்கு வந்த தண்ணீர் பாசன கால்வாய் வழியாக திறக்கப்பட்டு வந்தது.

  5,119 கன அடி தண்ணீர்

இந்தநிலையில் போடி மற்றும் போடி மெட்டு பகுதிகளில் நேற்று பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக கொட்டக்குடி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. அந்த ஆற்றில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதேபோல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்தும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து கிடு கிடுவென அதிகரித்தது. 

இதனையடுத்து வைகை அணையில் இருந்து உபரியாக திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 5,119 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

 மீண்டும் எச்சரிக்கை

வைகை அணையின் பிரதான 7 மதகுகள் மற்றும் 7 சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. 3,500 கனஅடி தண்ணீர் ஆற்றின் வழியாகவும், மீதமுள்ள தண்ணீர் கால்வாய் வழியாகவும் திறக்கப்பட்டுள்ளது.

அதிக நீர்வரத்து காரணமாக, வைகை அணையின் நீர்மட்டம் 69.50 அடியாக உயர்ந்துள்ளது. வைகை ஆற்றில் 3,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வைகை ஆற்றில் இறங்கவோ, அதனை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று கரையோர மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வைகை அணையின் முன்பு உள்ள இருகரைகளையும் இணைக்கும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

மேலும் செய்திகள்