திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு வழிகாட்டுதலை பின்பற்றா விட்டால் நடவடிக்கை. கலெக்டர் எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திகொள்வதில் அரசு வழிகாட்டுதலை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அமர் குஷ்வாஹா தரிவித்துள்ளார்.

Update: 2021-11-24 17:58 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திகொள்வதில் அரசு வழிகாட்டுதலை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அமர் குஷ்வாஹா தரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வீடு வீடாக தடுப்பூசி

திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 5,72,811 நபர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 2,66,734 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட 9,44,700 நபர்களுக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தும் வகையில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணிதீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் தமிழக அரசு, பொது சுகாதார சட்டத்தின் படி பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர் என்பதை உறுதி செய்வதற்கும், கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தொற்று பிறருக்கு பரவுவதை தடுக்கவும் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் பொது மக்கள் கூடும் இடங்களாகிய சந்தை, திரையரங்கம் மற்றும் பிற கேளிக்கைக் கூடங்கள், பள்ளி. கல்லூரி வளாகம் மற்றும் விளையாட்டு மைதானம், உணவகம், விடுதி, சத்திரம், தங்கும் இடங்கள் மற்றும் அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் அங்காடிகள் போன்ற பொது இடங்களில் பிறருக்கு நோய் தொற்று பரவாவண்ணம் நடந்துகொள்ள வேண்டும்.

நடவடிக்கை

அதுமட்டுமல்லாமல், மேலே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களின் உரிமையாளர்கள், பொறுப்பாளர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கொரோனா மற்றவர்களுக்கு பரவுவதைத் தடுக்க கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் தங்கள் நிறுவனங்களில் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். அங்குவரும் பயனாளிகளும் தடுப்பூசி செலுத்தியவர்களாக இருப்பதை செல்போனில் பெறப்பட்ட குறுஞ்செய்தி அல்லது  சான்றிதழ்கள் ஆகிய ஆவணங்களை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.

தமிழக அரசின் அறிவுறுத்தல்கள் தீவிரமாக மாவட்டத்தில் அமல்படுத்தபடுவதோடு, காவல், வருவாய், சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அதிகாரிகள் கொண்ட குழுக்களின் வாயிலாக தீவிரமாக கண்காணிக்கபட்டு, அரசு வழிகாட்டுதலை மீறும் உரிமையாளர்கள், பொறுப்பாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்