ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 60 பவுன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளை

அரக்கோணம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 60 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2021-11-24 18:26 GMT
அரக்கோணம்

அரக்கோணம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 60 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சத்தை மர்ம நபர்கள்  கொள்ளையடித்து சென்றனர்.

ரியல் எஸ்டேட் அதிபர்

அரக்கோணத்தை அடுத்த செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சுதானந்தன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கார்த்திகை தீபத்திருவிழா அன்று கைனூரில் உள்ள வீட்டில் தீபம் ஏற்றுவதற்காக  குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.

பின்னர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டிருந்த நிலையில் உள்புற கதவு உடைக்கபட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கபட்டு நகை மற்றும் பொருட்கள், சொத்து ஆவனங்கள் ஆகியவை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. 

60 பவுன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளை

இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்திகணேஷ், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் போலீசார் சென்று வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது சுமார் 60 பவுன் நகைகள், ரூ.10 லட்சம் ரொக்கம், உயர்ந்த பொருட்கள் கொள்ளை போயிருப்பதாக தெரிவித்தனர். இதனை அடுத்து போலீசார் கைரேகை நிபுனர்களை வரவழைத்து அங்கு கைரேகைகளை சேகரித்தனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்