ஜெயங்கொண்டம் அருகே 5 சாமி சிலைகள் மீட்பு

ஜெயங்கொண்டம் அருகே டீக்கடையில் விட்டுச் செல்லப்பட்ட 5 சாமி சிலைகள் மீட்கப்பட்டன.

Update: 2021-11-24 19:30 GMT
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம், கல்லாத்தூர் தண்டலை பகுதியில் வேல்முருகன் (வயது 38) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து விட்டு கடையை அடைக்க முயன்றபோது அங்குள்ள பெஞ்சில் பை ஒன்று இருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது உள்ளே சிறிய அளவில் செம்பாலான 5 சாமி சிலைகள் மற்றும் 1 தூபக்கால் ஆகியவை இருந்தன. இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு வேல்முருகன் தகவல் கொடுத்தார். 
தகவலின்பேரில், அந்த சாமி சிலைகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மீட்டு பார்வையிட்டபோது 12 செ.மீ. உயரமுள்ள கருடபகவான் சிலை, அதே அளவுள்ள அம்மன் சிலை, 8 செ.மீ. உயரமுள்ள பெருமாள் சிலை, 6 செ.மீ. உயரமுள்ள நடராஜர் சிலை, 5 செ.மீ. உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை ஆகிய 5 சிலைகளும், தூபக்கால் ஒன்றும் இருந்தன. 
கடத்தி வரப்பட்டவையா?
இதுகுறித்து தகவலறிந்த திருச்சி சிலை தடுப்பு தனிப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அந்த சிலைகளை கருவூலத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தினார். அதன்படி சிலைகள் அனைத்தும் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அந்த சிலைகள் எங்காவது கோவிலில் இருந்து கடத்தி வரப்பட்டவையா?, அதனை டீக்கடையில் வைத்து சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்