நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சங்கர்நகரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடந்தது.

Update: 2021-11-24 19:53 GMT
நெல்லை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சங்கர்நகரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடந்தது.

உள்ளாட்சி தேர்தல்

நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நெல்லை மாநகராட்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகள் அடங்கிய பகுதிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகளுக்கும், 2 நகராட்சிகளிலும் 42 வார்டுகளுக்கும், 17 பேரூராட்சிகளிலும் 273 வார்டுகளுக்கும் ஆக மொத்தம் 370 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் நெல்லை மாநகராட்சிக்கு 490 வாக்குச்சாவடிகளும், 2 நகராட்சிகளுக்கு 93 வாக்குச்சாவடிகளும், 17 பேரூராட்சிகளுக்கு 319 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 902 வாக்குச்சாவடிகள் இந்த தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ளன.

சரிபார்ப்பு பணி

நகரப்புற உள்ளாட்சித்தேர்தலுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக நெல்லை மாநகராட்சிக்கு 2 ஆயிரத்து 700 எந்திரங்களும், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு 2ஆயிரத்து 700 வாக்குப்பதிவு எந்திரங்களும் ஆக மொத்தம் 5ஆயிரத்து 400 வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் தயார் செய்யப்பட்டு நெல்லை மாநகராட்சியிலும், சங்கர்நகர் பேரூராட்சி அலுவலகத்திலும் வைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டு உள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னோடியாக சங்கர்நகர் பேரூராட்சி அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் சரிபார்க்கும் பணி மற்றும் மாதிரி வாக்குப்பதிவு ஆகியவை நடந்தது.
இந்த பணியானது நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் விஜயலட்சுமி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாகிம் அபூபக்கர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராம்லால் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
இதில் தி.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க. நிர்வாகிகள், ம.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்