ஊத்தங்கரை அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 20 ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல் டிரைவர் கைது

ஊத்தங்கரை அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 20 ஆயிரம் லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-25 04:57 GMT
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 20 ஆயிரம் லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
ரகசிய தகவல்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஓசூர் கிருஷ்ணகிரி வழியாக வந்த  லாரியில் சாராயம் கடத்தி வருவதாக சென்னை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுப்புலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் வடக்கு மண்டல துணை போலீஸ் சூப்பிரண்டு தட்சிணாமூர்த்திக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் இணையத் பாஷா மற்றும் போலீசார் யுவராஜ், சிவனேசன், இளந்திரையன், கவிராஜன், மகா மார்க்ஸ் ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அதில் 600 கேன்களில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.
டிரைவர் கைது
இதுதொடர்பாக லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது டிரைவர் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாலேந்திரசிங் (வயது33) என்பதும், வெளிமாநிலத்தில் இருந்து சாராயம் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். 
மேலும் 600 கேன்களில் கடத்தி வரப்பட்ட சாராயம் மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்து ஊத்தங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்சாண்டர், மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் ஆகியோர் டிரைவாிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்