அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து சாலை மறியல்

செங்கம் அருகே உள்ள பக்கரிபாளையம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-27 17:46 GMT
செங்கம்

செங்கம் அருகே உள்ள பக்கரிபாளையம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 

 பொதுமக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பக்கரிபாளையம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் சரிவர செய்யவில்லை என அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், உள்ளாட்சி பிரதிநிதிகளிடமும் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. 

மேலும் ஏரி உபரிநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து செல்வதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவும், இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறி அப்பகுதி மக்கள் செங்கம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 

 போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டாட்சியர் முனுசாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ், இன்ஸ்பெக்டர் சரவணகுமரன், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியலால் ½ மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதனால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனையடுத்து போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர்.

மேலும் செய்திகள்