மணல் லாரிகள் முன்படுத்து கிராம மக்கள் போராட்டம்

மணல் லாரிகள் முன்படுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-27 18:49 GMT
திருப்புவனம், 
மணல் லாரிகள் முன்படுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணல் குவாரி
திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த பூவந்தியில் இருந்து சிவகங்கை செல்லும் சாலையில் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட கீரனூர் பகுதியில் கிராவல் மணல் குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் ஏற்றிக்கொண்டு சிவகங்கை -பூவந்தி சாலையில் திருப்புவனம் யூனியனை சேர்ந்த குயவன்குளம் விலக்கு எதிரே வந்து லாரிகள் சென்றுவருகின்றன.
 மணல் லாரிகள் வரும் வழியில் ஏனாதி, குயவன்குளம் உள்பட சில கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து கால்வாய் உள்ளது. வரத்து கால்வாய்கரை வழியாக அடிக்கடி லாரிகள் சென்று வருவதாலும், மழைக்காலமாக இருப்பதாலும் வரத்துக் கால்வாய் பகுதிகளில் மணல் சரிந்து கால்வாய் குறுகி உள்ளது. 
மறியல்
மேலும் கண்மாய்களுக்கு தண்ணீர் வராமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு உள்ளனர். இதனால் ஏனாதி, குயவன் குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் மணல் ஏற்றி வந்த லாரிகளை நிறுத்தி அதன் முன்பு தரையில் படுத்து மறியல் செய்துள்ளனர்.
 பின்னர் குவாரி நடத்தும் நபர்கள் வந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் வரும் வரத்துக் கால்வாயை சரி செய்து கொடுப்பதாக தெரிவித்ததை அடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்