மாலை அணிவித்து மாணவர்களை வரவேற்ற கலெக்டர்

கடலூர் அருகே இல்லம் தேடி கல்வி மையத்தை திறந்து வைத்த கலெக்டர் பாலசுப்பிரமணியம், மையத்திற்கு வந்த மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்றார்.

Update: 2021-12-03 05:57 GMT
நெல்லிக்குப்பம்,

கடலூர் ஊராட்சி ஒன்றியம் பில்லாலி ஊராட்சியில் இல்லம் தேடி கல்வி மையம் திறப்பு விழா நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு இல்லம் தேடி கல்வி மையத்தை திறந்து வைத்தார்.
முன்னதாக இந்த மையத்திற்கு வந்த மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களை மலர் மாலை அணிவித்து கலெக்டர் வரவேற்றார். அப்போது மேள தாளங்களுடன் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கல்வி உபகரணங்கள்

தொடர்ந்து இத்திட்டத்தினை முழுமையாக பயன்படுத்தி மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடை வெளியை குறைப்போம் என்றும், மாணவர்கள் கல்வி கற்பதில் முழு கவனத்தை செலுத்துவோம் என்றும் மாணவர்களுக்கு கல்வி கற்பிற்கும் தன்னார்வலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்களை கலெக்டர் வழங்கி கூறியதாவது:-

இல்லம் தேடி கல்வி

கொரோனா பெருந்தொற்று காலத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்க " இல்லம் தேடிக் கல்வி" திட்டத்தினை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். 
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், மாணவர்கள் வரும் கல்வியாண்டில் அடுத்த வகுப்புக்கு செல்லும் போது அவர்கள் அதற்கு முழுத்தகுதி படைத்தவர்களாக இருப்பார்கள். மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்வதற்காகவும், இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்காகவும், தன்னார்வலர்களை கொண்டு தினசரி 1 முதல் 1½ மணி நேரம் (தினமும் மாலை 5 மணி முதல் 7 மணிக்குள்) கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ள இல்லம் தேடி கல்வி மையங்கள் உருவாக்கப்பட்டன.
 
தன்னார்வலர்கள்

இல்லம் தேடிக் கல்வி மையங்களில் கற்பித்தல் சேவையை மேற்கொள்ள தன்னார்வலர்கள் இணையவழி பதிவு செய்திருந்தனர். மேலும் ஒவ்வொரு குடியிருப்பு பகுதியில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்களுக்கு இருநாட்கள் இத்திட்டம் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் பள்ளிக்கு சென்று உற்று நோக்கல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 இத்திட்டமானது ஒரு அரசுத் திட்டமாக மட்டுமில்லாமல் பெற்றோர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், ஆசிரியர்கள், பல துறையை சார்ந்த பிரபலங்கள் என அனைவரும் இணைந்து முன்னெடுத்துச் செல்லும் ஒரு இயக்கமாக திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார். முன்னதாக இந்த திட்டத்தை அனைவருக்கும் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி, மாவட்ட உதவி திட்ட அலுவலர் எல்லப்பன், கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, வட்டார கல்வி அலுவலர் சரளா, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்