2 இடங்களில் 380 கிலோ ரப்பர் ஷீட் திருட்டு

குலசேகரம் அருகே ஒரே நாளில் 2 இடங்களில் 380 கிலோ ரப்பர் ஷீட்டை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-12-03 17:49 GMT
குலசேகரம், 
குலசேகரம் அருகே ஒரே நாளில் 2 இடங்களில் 380 கிலோ ரப்பர் ஷீட்டை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
உலர் கூடம்
குலசேகரம் அருகே உள்ள மாஞ்சக்கோணம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது55). இவர் தனது வீட்டின் பின்புறம் ரப்பர் ஷீட்டுகளை உலர்த்தும் உலர் கூடம் அமைத்துள்ளார். 
நேற்று முன்தினம் இரவு ஒரு மர்ம நபர் உலர் கூடத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த 350 கிலோ ரப்பர் ஷீட்டுகளை திருடி சென்றுள்ளார். 
நேற்று அதிகாலையில் செல்வராஜ் உலர் கூடத்திற்கு சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதையும், ரப்பர் ஷீட்டுகள் திருட்டு போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 
கண்காணிப்பு கேமரா
மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்கள் திசை மாற்றி வைக்கப்பட்டு, அவற்றின் மீது துணிகள்  மூடப்பட்டிருந்தது. அவற்றில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, கையுறை அணிந்த ஒரு மர்ம நபர் முகத்தை போர்வையால் மூடிக்கொண்டு நிற்கும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சி கண்காணிப்பு கேமராவை துணியால் மூடுவதற்கு முன்பு பதிவாகியது ஆகும். 
இந்த திருட்டு சம்பவம் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மேலும் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்  
இதேபோல் செல்வராஜின் வீட்டின் அருகே ரோஜர் (40) என்பவரது வீட்டின் பின்பக்க அறையில் வைக்கப்பட்டிருந்த 30 கிலோ ரப்பர் ஷீட் திருட்டு போயுள்ளது. 
இதுகுறித்தும் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த 2 சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. 2 இடங்களில் இருந்து திருடப்பட்ட 380 கிலோ ரப்பர் ஷீட்டின் ெமாத்த மதிப்பு ரூ. 65 ஆயிரம் என கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாக குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 
ஒரே நாளில் 2 இடங்களில் ரப்பர் ஷீட் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்