4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி

விழுப்புரத்தில் 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டியை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

Update: 2021-12-04 13:55 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். பொன்.கவுதமசிகாமணி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன் அனைவரையும் வரவேற்றார்.
இந்த போட்டியை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்போட்டி 4 பிரிவுகளாக நடத்தப்பட்டது. 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 6 கி.மீ. தொலைவும், 16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 8 கி.மீ. தொலைவும், 16 வயதுக்கு உட்பட்ட மாணவிகள், 16 வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் ஆகியோருக்கு 4 கி.மீ. தொலைவும் என்ற அடிப்படையில் நடத்தப்பட்டது.

4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு

இதில் 4 ஆயிரம் மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு இலக்கை நோக்கி ஓடினர். இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.1,500, 4-ம் பரிசாக ரூ.ஆயிரம் மற்றும் 5 முதல் 10 இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.500-ம் வழங்கப்பட்டது. இதனை அமைச்சர்கள் சுப்பிரமணியன், பொன்முடி ஆகியோர் வழங்கினர். முன்னதாக அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:-

அறிவுரை

கொரோனா வைரஸ் உருமாறி ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ் என்று உருமாறி இன்றைக்கு ஒமைக்ரான் வைரசாக வந்திருக்கிறது. இன்னும் ஒரு வருடமோ, 1½ ஆண்டோ நாம் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். உலக சுகாதார நிறுவனம் இனி முக கவசம் அணிய தேவையில்லை என்று சொல்லும் வரை நாம் கட்டாயம் முக கவசம் அணிந்துதான் செல்ல வேண்டும். இந்நோய் தொற்றில் இருந்து நம்மை காப்பாற்றுகிற ஒரே ஆயுதம் தடுப்பூசி. ஆகவே இங்கு வந்திருக்கிற மாணவ- மாணவிகள் அனைவரும் உங்களது பெற்றோர், உறவினர்களை கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்துங்கள். ஏனெனில் உங்கள் பாசத்திற்கு அவர்கள்தான் கட்டுப்பட்டவர்கள். மாணவ சமுதாயத்தினர் நினைத்தால் எதையும் எளிதாக நிறைவேற்றலாம். அதே நேரத்தில் மாணவர்கள், இளைஞர்கள் தினமும் நடைபயிற்சி, ஓட்டம், யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார். 

ரத்ததான முகாம் 

அதனை தொடர்ந்து ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் தி.மு.க. இளைஞரணியினர் ஏராளமானோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர் புஷ்பராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் அன்னியூர் சிவா, மாவட்ட துணை செயலாளர்கள் முருகன், மைதிலிராஜேந்திரன், கோலியனூர் ஒன்றியக்குழு தலைவர் சச்சிதானந்தம், நகர செயலாளர் சக்கரை, ஒன்றிய செயலாளர் கல்பட்டு ராஜா, தொ.மு.ச. பொதுச்செயலாளர் பிரபாதண்டபாணி, நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் வாலிபால் மணி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்