புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-12-04 20:40 GMT
சரி செய்யப்பட்ட பெயர் பலகை 
தர்மபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் தலைமை அலுவலகம் தர்மபுரியில் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ளது. இந்த அலுவலகத்தின் வெளியே ஆவின் ஜங்ஷன் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜங்ஷன் என்ற வார்த்தையில் கடைசி எழுத்து சேதமடைந்து விட்டது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பெயர் பலகையில் சேதமடைந்த எழுத்தை சரி செய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
-வினேத்குமார், வெண்ணாம்பட்டி, தர்மபுரி.
===
சாக்கடை கால்வாய் வசதி
கிருஷ்ணகிரி மாவட்டம் புதுப்பேட்டை நெசவுக்கார தெருவில் சாக்கடை கால்வாய் இல்லாததால் மழைநீர் சாக்கடை நீரோடு கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜீனத்கனி, நெசவுக்கார தெரு, கிருஷ்ணகிரி.

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா காட்டூர் பகுதியில் நீண்ட காலமாக சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
-மு.விஜய், காட்டூர், சேலம்.
===
தேங்கி நிற்கும் மழைநீர்
கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி பஞ்சாயத்து காந்திபுரம் கிராமத்தில் குழந்தைகள் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தின் முன்பு மழை நீர் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன்  குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே அங்கன்வாடி மையத்தில் நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அம்பிகாமயில், அரசம்பட்டி, கிருஷ்ணகிரி.
====
சீரமைக்கப்படாத சாலைகள்
நாமக்கல்-திருச்சி சாலையில் அமைந்துள்ள மாருதி நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அரசு  ஊழியர்கள் பழைய குடியிருப்பு பகுதியில் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும்.
-ஊர்மக்கள், நாமக்கல்.

சேலம் தாதகாப்பட்டி பென்சன் வேலு தெரு தபால் நிலையம் அருகில் உள்ள சாலை குண்டும், குழியுமாக பல வருடங்களாக இதே நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலாஜி, தாதகாப்பட்டி, சேலம்.

வேகத்தடை அவசியம் 
சேலம் மாவட்டம் தாரமங்கலம்-ஜலகண்டாபுரம் மெயின் ரோட்டில் கணக்குப்பட்டி பிரிவு அருகில் அரசு பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பகுதியில் வேகத்தடை இல்லாததால் வேகமாக செல்லும் வாகனங்களால் மாணவ-மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வேகத்தடை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
-ம.தினேஷ்குமார், கணக்குப்பட்டி, சேலம்.
===
பாதியில் நிற்கும் சாலை பணி
தர்மபுரி மாவட்டம் நரியனஅள்ளியில் இருந்து செட்டியார் கொட்டாய் வரை ஏற்கனவே இருந்த தார் சாலையை  புதிதாக அமைப்பதற்காக பொக்லைன் எந்திரத்தால் ரோட்டை பெயர்த்தெடுத்தனர். 4 மாதங்கள் ஆகியும் இதுவரை தார் சாலை அமைப்பதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல சிரமமாக உள்ளது. எனவே விரைவில் நடவடிக்கை எடுத்து தார் சாலை பணியை முடிக்க அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா?
-எஸ்.வெங்கடசாமி, நரியனஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்