கறம்பக்குடி அருகே கிராவல் மண் கடத்திய 4 லாரிகள், 2 பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல் 4 பேர் கைது

கிராவல் மண் கடத்திய 4 லாரிகள், 2 பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-12-05 17:16 GMT
கறம்பக்குடி:
கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடங்கள், குளங்கள் மற்றும் தனியார் இடங்களில் அனுமதி இன்றி கிராவல் மண் அள்ளி வெளி மாவட்டங்களுக்கு கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. எனவே அந்த பகுதிகளில் சோதனை நடத்தும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் மழையூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மழையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் கறம்பக்குடி - மழையூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற 2 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கிராவல் மண் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில் மழையூர் முத்து முனிஸ்வரர் கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் இருந்து கிராவல் மண் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது அங்கே மேலும் 2 டிப்பர் லாரிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் கிராவல் மண் அள்ளிகொண்டிருந்தனர். ஒரு டிராக்டரும் அப்பகுதியில் நின்றது. இதை தொடர்ந்து கிராவல்மண் கடத்திய 4 டிப்பர் லாரிகள், மண் அள்ள பயன்படுத்திய 2 பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜா (வயது 29), பாக்கியராஜ் (30), ஸ்ரீதர் (25), இளவரசன் (21) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் ஆட குட்டி, கணேசன், குணசீலன் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்