திருச்சி விமான நிலையத்துக்கு கொரோனா தொற்றுடன் வந்த பயணி

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமானநிலையத்துக்கு கொரோனா தொற்றுடன் பயணி வந்தார். அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள ஒமைக்ரான் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2021-12-07 02:17 GMT
செம்பட்டு, டிச.7-
சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமானநிலையத்துக்கு கொரோனா தொற்றுடன் பயணி வந்தார். அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள ஒமைக்ரான் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்று
திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று காலை 6.30 மணி அளவில் சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் 101 பயணிகளுடன் வந்தது. தற்போது, உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதன்காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
அதன்படி திருச்சி விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் மயிலாடுதுறையை சேர்ந்த 61 வயது முதியவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
 ஒமைக்ரான் வார்டில் அனுமதி
இதைத்தொடர்ந்து அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள ஒமைக்ரான் வார்டில் அனுமதித்தனர். மேலும் அவருக்கு ஒமைக்ரான் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய சளி மாதிரி எடுத்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த முடிவு வந்த பிறகுதான், அவர் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளாரா? இல்லையா? என தெரியவரும்.
இதேபோல் கடந்த வாரம் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படவில்லை என பரிசோதனை முடிவு வந்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்