‘அரசு அலுவலர்களுக்கு உறுதுணையாக இருப்போம்’ அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

‘அரசு அலுவலர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம்’ என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

Update: 2021-12-13 20:48 GMT
சேலம்
நன்றி தெரிவிக்கும் கூட்டம்
சேலத்தில் கடந்த 11-ந்தேதி அரசு விழா நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து விழாவில் பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு அலுவலர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் ஓய்வு பெறும் நாள் வரை அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதையே குறிக்கோளாக கொண்டு ஆர்வத்துடன் பணியாற்றுபவர்கள். அரசு எந்த திட்டங்களை அறிவித்தாலும் அதை மக்களுக்கு உரிய நேரத்தில் சென்று சேர்க்கின்ற பொறுப்பு அரசு அலுவலர்களுடையது.
உறுதுணையாக இருக்கும்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் குறித்த தேதியை அறிவித்தவுடன் அக்காலகட்டத்திற்குள் விழாவை சிறப்புற மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் பணியாற்றிய அனைத்து அலுவலர்களையும் நேரில் பார்த்து, பாராட்டி நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே வந்துள்ளேன். பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றி உள்ளேன். என்னுடன் பணியாற்றிய அனைத்து அலுவலர்களுக்கும் நான் உறுதுணையாக இருந்துள்ளேன்.
கருணாநிதியிடம் பாடம் கற்றவர்கள் நாங்கள். அரசு அதிகாரிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை எங்களுக்கு எடுத்துரைத்தவர் கருணாநிதி. அரசு அலுவலர்களின் செயல்களால் தான் ஆட்சிக்கு பாராட்டு கிடைக்கும். எனவே அரசு அலுவலர்களுக்கு எப்போதும் இந்த அரசு உறுதுணையாக இருக்கும்.
பெருமகிழ்ச்சி
பணியாளர்கள், அரசு அலுவலர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்றைக்கும் உங்கள் நண்பனாக உங்களோடு இருந்து இயன்றளவு உதவிகளை செய்வோம். சேலத்தில் நடந்த அரசு விழா பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களிடம் சிறப்புடன் பகிர்ந்து கொண்டார் என்பதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனவே அரசு அலுவலர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 
இவ்வாறு அவர் கூறினார். 
கூட்டத்தில் சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ், மாவட்ட வன அலுவலர் கவுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்