முதலீடு செய்தால் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ.4 கோடி மோசடி- பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்

முதலீடு செய்தால் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ.4 கோடி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தனர்.

Update: 2022-01-03 21:53 GMT
ஈரோடு
முதலீடு செய்தால் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ.4 கோடி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தனர்.
இரட்டிப்பு லாபம்
ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தலைமையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 9 பேர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகனிடம் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
கொடுமுடி மலையம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஒருவரை எங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக தெரியும். அவர் கொடுமுடி புதிய பஸ் நிலையத்தில் புதிதாக வங்கி தொடங்க போவதாக எங்களிடம் கூறினார். மேலும், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் சம்பாதிக்கலாம் எனவும் ஆசை வார்த்தை கூறினார்.
ரூ.4 கோடி மோசடி
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் அங்கீகாரம் விரைவில் பெற்று, முழுமையான வங்கியாக செயல்படும் எனவும் அவர் உறுதி அளித்தார். இங்கிலாந்து நிறுவனமும், அவரும் இணைந்து செயல்படுவதாகவும், பங்கு சந்தை நிலவரம், பங்குகள் குறித்தும் விளக்கி, www.bggroups.net என்ற இணையதளத்தை காண்பித்து, தகவல்களை தெரிந்து கொள்ளும்படியும் கூறினார்.
மேலும், அவருடைய வங்கியில் முதலீடு செய்யும் பணத்தை எப்போது வேண்டுமானாலும் கடனாக பெற்றுக்கொள்ளலாம் என்றும், வைப்புத்தொகைக்கு எவ்வித பாதிப்பும் வராது என்றும் கூறினார். இதனை நம்பி நாங்கள் அனைவரும் வங்கி மூலமாக அவரிடம் பணம் செலுத்தினோம். ஆனால் எங்களிடம் பணத்தை பெற்றுக்கொண்ட அவர், அதன் பின்னர் தலைமறைவானார். அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. எங்கள் 9 பேரிடம் இருந்து மட்டும் ரூ.4 கோடி வரை பெற்று மோசடி செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து எங்களுடைய பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்