இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 1148 269 வாக்காளர்கள் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட கலெக்டர் ஸ்ரீதர் மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 48 ஆயிரத்து 269 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்தார்

Update: 2022-01-05 17:43 GMT
வாக்காளர் பட்டியல் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஸ்ரீதர் வெளியிட்டார். 
பின்னர் அவர் கூறியதாவது:-

சிறப்பு சுருக்க திருத்தப்பணி

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி கடந்த 1-01-2022-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்கள் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம், பெயர் நீக்கம் செய்வது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 1-11-2021 முதல் 30-11-2021 வரை சிறப்பு சுருக்க திருத்தப்பணிகள் 1,272 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது. 
இதில் பெயர் சேர்த்தல் தொடர்பாக 33,586 மனுக்கள், பெயர் நீக்கம் 3,341 மனுக்கள், திருத்தம் 3,538 மனுக்கள் என மொத்தம் 42,303 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

11,48,269 வாக்காளர்கள்

இதன்படி மாவட்டத்தில் 5,73,070 ஆண் வாக்காளர்கள், 5,74,984 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினத்தவர் 215 பேர் என மொத்தம் 11,48,269 வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி வாரியாக வாக்காளர் விவரம் வருமாறு:-

வாக்காளர் சேவை மையம்

இறுதி வாக்காளர் பட்டியல் கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர், தாலுகா அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள், நியமன வாக்குச்சாவடி அமைவிடங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 
பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் தொடர்பாக தகவல்கள் ஏதேனும் தேவைப்பட்டால் அலுவலக வேலை நாட்களில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மையத்தை 1950 மற்றும் 04151-220200 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், கோட்டாட்சியர்கள் சரவணன், சாய்வர்தினி, தேர்தல் தனி தாசில்தார் பாலசுப்பிரமணியன், நகராட்சி ஆணையாளர் குமரன், தி.மு.க ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், பா.ஜ.க. மாவட்டத் தலைவர் பாலசுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாவு, அ.தி.மு.க நிர்வாகி வேணுகோபால், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் நல்லதம்பி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்