கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் பொதுமக்களுக்கு அபராதம் கலெக்டர் ஸ்ரீதர் அதிகாரிகளுக்கு உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றாத வணிகநிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்க கலெக்டர் ஸ்ரீதர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

Update: 2022-01-07 16:33 GMT
கள்ளக்குறிச்சி

ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவது குறித்து வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர்  பேசும்போது, தமிழகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.  அதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை வணிக நிறுவனங்கள், உணவகங்கள் போன்றவை செயல்பட காவல்துறையினர் அனுமதிக்கக்கூடாது. 

அபராதம் விதிக்க வேண்டும்

முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறை, வருவாய்த்துறை, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அபராதம் விதிக்க வேண்டும். 
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது, அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வெளியே வரும் நபர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, காவல் துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவல்துறை, வருவாய்த்துறை, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஒத்துழைக்க வேண்டும்

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இ்வ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரெத்தினமாலா, கோட்டாட்சியர்கள் சரவணன், சாய்வர்தினி மற்றும் காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்