அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17-ந் தேதி நடக்கிறது

முழுஊரடங்கு காரணமாக 16-ந் தேதி நடக்க இருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மறுநாள் 17-ந் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது என்று மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் அறிவித்துள்ளார்.

Update: 2022-01-11 22:07 GMT
மதுரை
முழுஊரடங்கு காரணமாக 16-ந் தேதி நடக்க இருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மறுநாள் 17-ந் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது என்று மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கட்டுப்பாடுகள் 
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 16-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அதன்படி 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு தினத்தன்று ஜல்லிக்கட்டு நடத்துவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. எனவே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை மறுநாள் 17-ந் தேதி (திங்கட்கிழமை) நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விழா கமிட்டியினர், கிராம மக்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளுடன்தான் அலங்காநல்லூர் உள்பட அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை.
முன்பதிவு
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் பதிவு ஆன்லைனில் தொடங்கி உள்ளது. இந்த முன்பதிவு இன்று (புதன்கிழமை) மாலை 5 மணி வரை மட்டுமே நடைபெறும். 
ஜல்லிக்கட்டு போட்டிகளை காண 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்படும். அவர்களுக்கு பாஸ் வழங்கப்படும். பாஸ் இருப்பவர்கள் மட்டுமே போட்டியை காண முடியும். பார்வையாளர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்